வளைகுடா செய்திகள்

ஒரு டூரிஸ்ட் விசாவில் இரு நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு.. சுற்றுலாவை மேம்படுத்த முயற்சி செய்யும் சவூதி-ஓமான் அரசு!!

சவுதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளும் ஒரே மாதிரியான சுற்றுலா விசா மற்றும் டூரிஸம் காலண்டரை அறிமுகப்படுத்துவது குறித்து இரு நாடுகளின் சுற்றுலா அமைச்சர்களும் சமீபத்தில் விவாதித்துள்ளனர். சவுதி சுற்றுலா அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் அவர்கள் ஒமானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பயணம் மேற்கொண்டபோது, ஓமானின் சுற்றுலா அமைச்சர் சலீம் அல் மஹ்ரூகி அவர்களுடன் இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளின் சுற்றுலாத் துறை அமைச்சர்களால் விவாதிக்கப்பட்ட திட்டங்களில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இரு நாட்டு குடிமக்கள் மற்றும் GCC நாடுகளின் குடியிருப்பாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா விசா, பருவகால விமான சேவைகள் மற்றும் கூட்டு சுற்றுலா காலண்டரின் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்த்தல் மற்றும் முக்கியமாக சுற்றுலாத்துறையில் முதலீடு செய்யும் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டங்களில் கடந்த டிசம்பரில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட Gulf Tourism Strategy 2023-2030 என்பதன் கீழ் சுற்றுலாத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களை மேம்படுத்துதல் போன்றவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இரு நாட்டு அமைச்சர்களிடையே நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, முதல் கட்டமாக கூட்டு சுற்றுலா முயற்சிகளை தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு தரப்பும் சுற்றுலாத் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம் ஆகியவற்றில் கூட்டு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளன.

ஓமானில் இருந்து சவூதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தோராயமாக 164,000 ஆகும். இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது 136% வளர்ச்சி கொண்டுள்ளது. அதே நேரம் மக்களின் செலவு விகிதமானது சராசரியாக 310 சவூதி மில்லியன் ரியால் ஆகும். இது கடந்த ஆண்டை விட 71% அதிகம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சவூதியில் இருந்து ஓமானுக்கு பயணித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது தோராயமாக 49,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 92% அதிகமாகும். அதே நேரம் செலவு விகிதமானது கடந்த ஆண்டை விட 117 சதவீதம் அதிகரித்து 213 சவூதி மில்லியன் ரியால் என்ற இலக்கினை எட்டியுள்ளது.

இந்நிலையில் இரு நாட்டு அமைச்சர்கள் விவாதித்த திட்டமானது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதாவது ஓமான் மற்றும் சவுதி அரேபியா என இரு நாடுகளுக்கும் ஒரே டூரிஸ்ட் விசா என்ற நிலை வருமேயானால் இந்த இரு நாடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரும் வருடங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!