துபாய் மற்றும் ஷார்ஜா இடையே மீண்டும் இயக்கப்படும் ஃபெர்ரி சேவை..!! அடுத்த மாதம் முதல் சேவை தொடங்கும் என அறிவிப்பு…!!

துபாய் மற்றும் ஷார்ஜா இடையே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த துபாய் ஃபெர்ரி வழியாக கடல் போக்குவரத்து சேவையானது மீண்டும் தொடங்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. முன்னதாக 2020இல் உலகெங்கிலும் பரவிய கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலினால் இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாய் ஃபெர்ரி சேவையானது திங்கள் முதல் வியாழன் வரை தினசரி எட்டு பயணங்களையும், வெள்ளி முதல் ஞாயிறு வரை 6 பயணங்களையும் செயல்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த ஃபெர்ரி சேவையானது, துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு இடையேயான இயக்கத்தை எளிதாக்குவதுடன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஷார்ஜாவில் உள்ள RTAவின் ஒத்துழைப்புடன், முதன்முறையாக துபாயில் உள்ள அல் குபைபா மரைன் ஸ்டேஷன் மற்றும் ஷார்ஜாவில் உள்ள அக்வாரியம் மரைன் ஸ்டேஷன் ஆகியவற்றுக்கு இடையே, துபாயை மற்ற எமிரேட்களுடன் இணைக்கும் வகையில் இந்த கடல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பயண நேரம்:
அல் குபைபா ஸ்டேஷன் முதல் ஷார்ஜா அக்வாரியம் ஸ்டேஷன் வரையிலான பயணத்திற்கு சுமார் 35 நிமிடங்கள் ஆகும். வார நாட்களில் ஷார்ஜாவிலிருந்து இரண்டு ஃபெர்ரிகள் காலை 7 மணிக்கும் 8.30 மணிக்கும் புறப்படும் மற்றும் துபாயிலிருந்து காலை 7.45 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, ஷார்ஜாவிலிருந்து மாலையில் 4:45 மற்றும் 6:15 மணிக்கு இரண்டு பயணங்களும், துபாயில் இருந்து மாலை 4, 5:30 மற்றும் இரவு 7 மணிக்கு மூன்று பயணங்களும் இருக்கும்.
அத்துடன் வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை நண்பகல் முதல் ஒவ்வொரு எமிரேட்டில் இருந்தும் மூன்று பயணங்கள் என மொத்தம் ஆறு பயணங்கள் இயக்கப்படும். அதன்படி, ஷார்ஜாவிலிருந்து புறப்படும் நேரம் பிற்பகல் 2, 4 மற்றும் மாலை 6 மணிக்கும், துபாயில் இருந்து பயணங்கள் பிற்பகல் 3, 5 மற்றும் இரவு 8 மணிக்கும் சேவை இயக்கப்படும்.
டிக்கெட் விவரம்:
துபாய் ஃபெர்ரியில் ஒரு பயணத்திற்கான சில்வர் வகுப்பிற்கு 15 திர்ஹமும், கோல்ட் வகுப்பிற்கு 25 திர்ஹமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணத்தை அனுபவிக்கலாம்.
அத்துடன் டிக்கெட்டுகளை, RTA இணையதளத்தில் ஆன்லைனிலும் வாங்கலாம் அல்லது நோல் கார்டைப் பயன்படுத்தியும், ஸ்டேஷனில் உள்ள கஸ்டமர் சர்வீஸ் டெஸ்க்கில் கட்டணத்தைச் செலுத்தியும் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
2019 ஆம் ஆண்டில் துபாய் மற்றும் பிற எமிரேட்டுகளுக்கு இடையே இயக்கப்படும் முதல் கடல் போக்குவரத்து சேவையை குறிக்கும் வகையில், துபாயில் உள்ள அல் குபைபா மரைன் ஸ்டேஷன் மற்றும் ஷார்ஜாவில் உள்ள அக்வாரியம் மரைன் ஸ்டேஷன் இடையே பயணிக்கும் பயணிகளுக்காக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஜூலை 27 அன்று ஃபெர்ரி சேவையை தொடங்கியது. அதன் பிறகு, 2020 தொற்றுநோய் பரவல் காரணமாக சேவை இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.