அமீரக செய்திகள்

தடை அதை உடை! – துபாயில் கார் கிளீனராக இருந்து கோடீஸ்வரர் ஆன இந்தியர்..!! கனவை நிஜமாக்கியவரின் கதை…

வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு புலம்பெயரும் வெளிநாட்டினர்கள், ஆரம்பத்தில் சிறிய இடத்தில் தொடங்கி கோடீஸ்வரர் ஆன கதைகள் பல உண்டு. அவ்வாறு கடும் உழைப்பில் முன்னோக்கிச் சென்று மல்டிமில்லியனர் ஆன இந்திய வெளிநாட்டவர் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

துபாயில் வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்தவரான விக்னேஷ் விஜய்குமார் என்பவர் சாதாரண கார் கழுவுபவராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது மில்லியன் கணக்கான சொத்துகளுக்கு அதிபதியாகவும், பல சொகுசு கார்களின் உரிமையாளராகவும் தனது கடின உழைப்பினால் உருவெடுத்துள்ளார்.

Wealth-i என்ற குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருக்கும் இவர், ஆரம்பத்தில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக கேரளாவில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு வந்துள்ளார். ஆரம்ப நாட்களில் அவர் பகுதி நேர வேலையாக கார் கழுவும் வேலையும் செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து முதல் சில மணிநேரங்களை தேரா பகுதியில் கார்களைக் கழுவுவதில் செலவிட்டுள்ள அவர், பெரிய கார்களுக்கு 150 திர்ஹம், சிறிய கார்களுக்கு 130 திர்ஹம் என ஒரு மாதத்திற்கு இத்தனை சிறிய தொகையை பகுதி்நேர வேலை மூலமாக சம்பாதித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில், ஏழு பேருடன் ஒரு அறையில் வசித்து வந்தது பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார். இவ்வாறு பல சிரமங்களை எதிர்கொண்ட போதும், சொகுசு கார்கள் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த அவர், ஒரு டஜன் சொகுசு கார்களை சொந்தமாக வாங்க வேண்டும் என்ற வெறி தனக்குள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் 2005 இல் வரவேற்பாளராக பணியாற்றி 3,500 திர்ஹம்கள் சம்பாதித்து வந்த விக்னேஷ், தனது பெரிய லட்சியத்தை அடைய கூடுதல் வேலைகளைச் செய்து அயராது உழைக்கத் தொடங்கியுள்ளார். படிப்படியாக விஜயகுமாரின் நிலையும் உயர்ந்து சொந்தமாக ஒரு வணிகத்தை தொடங்கி இப்போது பல தொழில்களுக்கு அதிபராக உள்ளார்.

கிளீனராக பணிபுரிந்து இன்று மல்டி மில்லினியராக உச்சம் தொட்டுள்ள விக்னேஷ் விஜயகுமார் ரியல் எஸ்டேட், ஹாஸ்பிட்டாலிட்டி, இ-பேமன்ட், கார் வாடகை, மனித வளம் மற்றும் சட்ட மற்றும் வணிக ஆலோசனை என பல்வேறு தொழில்களுக்கு நிறுவனராக உருவெடுத்துள்ளார். மேலும் இவரது நிறுவனங்களில் 700 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

ஜுமேராவில் உள்ள தனது வில்லாவில் தற்போது வசித்து வரும் விக்னேஷ், அவர் சிறு வயதாக இருக்கும் போது கண்ட கனவைப் போலவே, உலகின் முன்னணி பிராண்டுகளான ஃபெராரி, ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி Gt கான்டினென்டல், பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர், ரேஞ்ச் ரோவர், காடிலாக் எஸ்கலாடா, மெர்சிடிஸ் வியானோ, லிங்கன் ஏவியேட்டர், மேபேக், BMW 7 சீரிஸ், மெர்சிடிஸ் E300, மெர்சிடிஸ் G630, மஹிந்த்ரா தார், நிஸ்ஸான் பாட்ரோல் மற்றும் டிப்ஃபென்ட்டர் போன்ற சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

வாழ்வில் பல தடைகளைத் தகர்த்தெறிந்து துணிச்சலுடன் எதிர்நீச்சல் செய்த விஜயகுமார், 2013ல், இந்தியன் அசோசியேஷன் ஆஃப் துபாய் வெளியிட்ட 50 இந்திய தொழிலதிபர்களின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, 2020 இல் துபாய் வர்த்தக சபையின் கோல்டன் சாதனை விருதையும் 2022 இல் யூத் பிசினஸ் ஐகான் விருதையும் வென்றுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!