வளைகுடா செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சாதகம் நிறைந்த ஓமன் அரசின் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம்!! – ஒரு பார்வை..!!

ஓமன் நாட்டில் கடந்த செவ்வாயன்று அரச ஆணை மூலம் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம் 53/2023 அதன் பல்வேறு சிறப்பம்சங்களின் மூலம் நாட்டில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. புதிய சட்டத்தின் படி, தொழிலாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தவிர, தொழிலாளியின் பாஸ்போர்ட் அல்லது தனிப்பட்ட ஆவணங்களை முதலாளி வைத்திருக்கக் கூடாது என்பதும் அடங்கும்.

பிரிவு 10 இன் படி, வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு தொழிலாளி தனது முடிவை அறிவித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் வேலை குறித்த தனது புகாரைச் சமர்ப்பிக்கலாம், புகாரின் அடிப்படையில் சட்டத்தின் பிரிவு (9) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், ஒவ்வொரு தொழிலாளிக்கும் முப்பது நாட்களுக்கு குறையாத முழுமையான ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்புக்கு உரிமை உண்டு. தனது வேலைக்கு ஏற்றார் போல் எப்பொழுது வேண்டுமானாலும் விடுமுறையினை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வருட விடுமுறையை எடுப்பதற்கு நிறுவனத்தில் சேர்ந்து குறைந்தது ஆறு மாத காலம் ஆகியிருக்க வேண்டும்.

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி தொழிலாளியின் வருடாந்திர விடுமுறைகள் வழங்கப்படலாம், மேலும் ஓமானியல்லாத தொழிலாளி தனது நாட்டில் இருந்து திரும்புவதற்கான விமான டிக்கெட்டினை கோருவதற்கான உரிமையும் உண்டு. மேலே குறிப்பிட்டபடி சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களில் தொழிலாளி தனது முழு ஊதியத்தை பெற அவர் உரிமையுடையவர் ஆவார்.

மேலும், தொழிலாளிகளுக்கு ஏதாவது தவிர்க்க முடியாத காரணம் இருப்பின் முதலாளியின் சம்மதத்தின் பெயரில் ஊதியம் இல்லாத சிறப்பு விடுப்பினை எடுத்துக் கொள்ளவும் உரிமை உண்டு. இக்காலகட்டங்களில், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சிறப்பு தொகையினை தொழிலாளியை செலுத்த வேண்டும்.

அத்துடன் தொழிலாளியின் விருப்பத்தின் பெயரில், அவர் எடுக்காத வருடாந்திர விடுமுறை நாட்களுக்கான அடிப்படை ஊதியத்தை முதலாளி வழங்க வேண்டும். ஒருவேளை, பணி முடிவதற்குள் அவரது சேவை முடிவடையும் பட்சத்தில், அவரது வருடாந்திர விடுப்பு இருப்புக்கான முழு ஊதியத்தினை கோரவும் தொழிலாளிக்கு உரிமை உண்டு.

இவ்வாறு நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு ஓமன் அரசு வெளியிட்ட இந்த திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டமானது ஓமானில் வசிக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!