ஷார்ஜாவின் ரோல்லாவுக்கு இயக்கப்பட்டு வந்த பொதுப் பேருந்து சேவை ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தப்படும்!! அஜ்மான் போக்குவரத்து ஆணையம் தகவல்..!!

அமீரக குடியிருப்பாளர்களின் வசதிக்காக ஷார்ஜாவின் ரோல்லா பகுதிக்கும் அஜ்மான் இண்டஸ்ட்ரியல் பகுதிக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த பொதுப் பேருந்தை நிறுத்தி வைப்பதாக அஜ்மான் எமிரேட்டின் போக்குவரத்து ஆணையம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
ரோல்லா ஷார்ஜாவின் மிகவும் பரபரப்பான மற்றும் பிரபலமான சுற்றுப்புறங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதிக்குச் செல்லும் பஸ் ரூட் ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தி வைக்கப்படும் என்று அஜ்மான் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருப்பதால், இனி இப்பகுதிக்கு செல்லும் பயணிகள் இரண்டு இணைப்பு பேருந்துகளில் செல்ல வேண்டும்.
ஆகவே, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எமிரேட்டின் இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருந்து ஷார்ஜாவின் ரோல்லாவுக்கு AJ2 பேருந்தில் சென்று, பின்னர் அல் முசல்லா பஸ் ஸ்டேஷனில் உள்ள ஷார்ஜா லைனுக்கு (SHJ1) மாறி அவர்களது இலக்கை அடையலாம் என்று ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.