அமீரக செய்திகள்

துபாயின் MBZ சாலையில் நெரிசலை குறைக்க போக்குவரத்தில் மாற்றம்.. ஏப்ரல் 28 முதல் அமல்.. RTA அறிவிப்பு..!!

துபாயின் முக்கியமான சாலைகளில் ஒன்றான ஷேக் முகமது பின் சையத் சாலையில் (MBZ Road) ஏற்படும் கடும் நெரிசலை குறைக்க, போக்குவரத்து தடை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. மேலும் இந்த முடிவானது, துபாய் காவல்துறை தலைமையகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் RTA குறிப்பிட்டுள்ளது.

RTA வின் இந்த அறிவிப்பின் படி, ஷேக் முகமது பின் சையத் சாலையில் செல்லும் டிரக்குகளுக்கான இயக்க தடை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய தடை நேரம் அறிவிக்கப்ட்டுள்ளது. இதனால் பீக் ஹவர்ஸ் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைவதுடன், வாகன விபத்துகளும் பெருமளவில் தவிரக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த மாற்றியமைக்கப்பட்ட தடை நேரமானது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில், ராஸ் அல் கோர் சாலையில் இருந்து ஷார்ஜா வரை இரு திசைகளிலும் செல்லும் சாலையின் ஒரு பகுதிக்கு பொருந்தும் என்றும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இந்த அட்டவணையின்படி, MBZ நெடுஞ்சாலையின் இந்தப் பகுதியை காலை 6:30 மணி முதல் 8.30 மணி வரை லாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆகிய நேரங்களிலும் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிரக் இயக்க நேரத்தை மாற்றியமைக்கும் இந்த செயல்முறையானது, சாலைகளில் செல்லும் வாகனங்களின் அடர்த்தி, விபத்து விகிதங்கள், சாலையோர நகர்ப்புற வளர்ச்சி மற்றும் போக்குவரத்தை கையாளும் மாற்று வழிகளின் திறன் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டும், பல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை தொடர்ந்தும் எடுக்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

இது குறித்து RTAவின் போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் CEO ஹுசைன் அல் பன்னா அவர்கள் பேசுகையில், இந்த நடவடிக்கை ஷேக் முகமது பின் சையத் சாலையில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பீக் ஹவர்ஸில் மாற்று வழிகளில் சீரான டிரக் இயக்கங்களை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், நெரிசலான நேரங்களில் ஷேக் முகமது பின் சையத் சாலையில் டிரக் போக்குவரத்து நேரத்தை மாற்றுவதற்கான முடிவு துபாய் காவல்துறை தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் எடுக்கப்பட்டதாகவும், இந்த மாற்றம் போக்குவரத்து நெரிசலை 15% வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, புதிய டிரக் இயக்க அட்டவணை பற்றிய விவரங்களை கனரக வாகன ஓட்டுநர்கள், டிரக் உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தெரியப்படுத்த RTA, துபாய் காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து விரிவான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், தடைசெய்யப்பட்ட மண்டலங்களின் ஆரம்பம் மற்றும் முடிவு இரண்டிலும் தகவல் தரும் அடையாளங்களை நிறுவுவது இதில் அடங்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆகவே, டிரக் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறும், தடைசெய்யப்பட்ட நேரங்களில் எமிரேட்ஸ் சாலை அல்லது நியமிக்கப்பட்ட டிரக் ஓய்வு பகுதிகள் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் ஹுசைன் அல் பன்னா வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!