அமீரக செய்திகள்

அபுதாபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தண்ணீர் கேனிற்காக வைக்கப்பட்ட பணத்தை திருடிய டெலிகாம் விற்பனையாளர்..!! சிசிடிவி கேமராவில் பதிவு!

அபுதாபியில் குடியிருப்பாளர் ஒருவர் வீட்டிற்கு வெளியே வைத்திருந்த பணத்தினை விற்பனையாளர் ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் சனிக்கிழமை இரவு நடந்த இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அமீரகத்தில் உள்ள ஒரு டெலிகாம் பிராண்டின் விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்காக விற்பனையாளர் ஒருவர் ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார். அந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள் தண்ணீர் கேனிற்கு பணம் கொடுப்பதற்காக, சனிக்கிழமை இரவே காலியாக உள்ள தண்ணீர் கேனின் கீழ் பணத்தையும் அதனுடன் சில்லரைகளையும் வைத்துள்ளனர்.

மறுநாள் காலை ஸ்டிக்கர் ஒட்ட வந்த நபர் அந்த பணத்தை பார்த்ததும், அதில் உள்ள பணத்தாள்களை எடுத்து விட்டு சில்லறையை மற்றும் விட்டுச் சென்றுள்ளார். தண்ணீர் கேன் போட வரும் நபரோ தண்ணீரை வைத்து விட்டு அதற்கான பணத்தை வீட்டு உரிமையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், வீட்டு உரிமையாளருக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும், தண்ணீர் கேன் போட வந்த நபருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிறகு, பெரும் குழப்பம் அடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த பொழுது தான் அவருக்கு உண்மை விளங்கியுள்ளது. மேலும், விளம்பர ஸ்டிக்கர் ஒட்ட வந்த இடத்தில் பணத்தை திருடிய அந்த நபரின் செயலால் அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறும் பொழுது, நான் எப்பொழுதும் பணத்தை ஒரு காகிதத்தில் சுற்றி காலி தண்ணீர் கேனுக்கு கீழே வைத்து விடுவேன். தண்ணீர் கொண்டு வரும் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வந்து புதிய கேன்களை வழங்குவதால், சனிக்கிழமை இரவே வீட்டிற்கு வெளியே பணத்தை வைத்துவிடுவது வழக்கம்.

இதனால், விடுமுறை நாளின் காலை நேரத்தில் எங்களை அழைக்க வேண்டிய அவசியமின்றி ஊழியர்கள் வந்து பணத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் கேன்களை வைத்து விட்டு செல்வார்கள். ஆனால், நம்பிக்கையுடன் அணுகும் விற்பனையாளர்களே இத்தகைய செயல்களை செய்தால் எப்படி நம்பிக்கையுடன் பணத்தினை வைப்பது என்று கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தண்ணீர் கேன் போட வந்த நபர் கூறும் பொழுது “வாடிக்கையாளர்கள் பணம் அல்லது கூப்பன்களை தண்ணீர் கேன்களுக்கு அடியில் விட்டுச் செல்வது வழக்கம். பல இடங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் நேரடியாக பணம் செலுத்துகிறார்கள்.

ஆனால் சில சமயங்களில் நாங்கள் பணத்தை எடுத்துவிட்டு இல்லை என்று கூறுவதாக அவர்கள் சந்தேகிக்கிறார்கள். மேலும் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க எந்த வழியும் இல்லை. சில சமயங்களில், எங்கள் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதற்காக நாங்கள் எங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து பணத்தைச் செலுத்துகிறோம்.

ஆனால் இந்த வீட்டில் சிசிடிவி கேமரா இருந்ததால் எங்கள் பக்கம் இருந்த உண்மை இப்போது அனைவருக்கும் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!