வளைகுடா செய்திகள்

சவூதி: 7.5 மில்லியன் மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய நவீன திட்டத்தை தொடங்கிய சவுதி அரேபியா… 2030 ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் மரங்களை நட திட்டம்!!

சவுதி அரேபியா நாட்டில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ‘பசுமை ரியாத்’ திட்டத்திற்காக, ரியாத் நகரில் உள்ள 7.5 மில்லியன் மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய, ஒரு நாளைக்கு 1.7 மில்லியன் கன மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு செல்லும் வகையில் 1,350 கிலோமீட்டர் நீளமுள்ள நீர் பாசன திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7.5 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு, மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத், இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அவர்களின் முயற்சியால் அறிவிக்கப்பட்ட நான்கு முக்கிய ரியாத் திட்டங்களில் ஒன்று “கிரீன் ரியாத்” என்பதாகும்.

எனவே இதன் அடிப்படையில் ரியாத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் நீர் பாசனத்தின் மூலம் இணைக்கும் வகையில் துணை நெட்வொர்க்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரை எடுத்துச் செல்லும் நெட்வொர்க்கின் விட்டம் 1.2 முதல் 2.4 மீட்டர் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நெட்வொர்க்கை அமைக்கும் பணிகளில் நகரங்களின் போக்குவரத்து பாதிக்க கூடாது என்ற நோக்கில் பணிகள் விரைவாக நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் நீர் பாசன முறைகளை கண்காணிக்கும் பொருட்டு தனியாக ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட நீரினை பாசனத்திற்காக பயன்படுத்துவது இந்த நீர்ப்பாசனத்தின் சிறப்பு அம்சமாகும்.

நாட்டின் சுற்றுச்சூழல் நீர் மற்றும் விவசாய அமைச்சகம் மற்றும் தண்ணீருக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை கொண்ட குழுவானது இந்த தொழில்நுட்பத்தை முற்றிலுமாக கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரியாத் நகரின் நகர்ப்புற சூழலை காடுகளை வளர்ப்பதன் மூலம் பசுமைப்படுத்துதல் மற்றும் சவுதி அரேபியாவின் எதிர்கால நோக்கத்திற்காக சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல் ஆகிய நோக்கத்துடன் தற்பொழுது இந்த மரங்களை அமைத்து நீர் பாசனம் செய்யும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!