அமீரக செய்திகள்

UAE: வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உரிய நேரத்தில் சம்பளம் பெற WPS முறை இன்று முதல் அமல்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி 27, 2022 முதல், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்ளுக்கு சம்பளம் வழங்க, ஆன்லைன் ஊதிய பாதுகாப்பு அமைப்பை (WPS) பயன்படுத்திக்கொள்ள முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. WPS ஆனது, அமீரகத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிப் பரிமாற்றங்கள், பரிமாற்ற அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் சம்பளத்தைச் செலுத்த முதலாளிகளுக்கு உதவுகிறது. இதன் மூலம் வீட்டு உதவியாளர்கள் உரிய நேரத்தில் தங்களின் சம்பளத்தைப் பெற்றிருப்பதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேட்டசேஷன் அமைச்சகத்தின் வீட்டுப் பணியாளர் விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் கலீல் கௌரி இது பற்றி கூறுகையில், வீட்டுப் பணியாளர்களுக்கான WPS ஐ விருப்பப்படி செயல்படுத்துவது, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், “முதலாளிகள் அவர்கள் சம்பளத்தை சரியான நேரத்தில் செலுத்தியிருப்பதை இது நிரூபிக்க உதவுகிறது, அதே நேரத்தில் வீட்டு உதவியாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தைப் பெறுவதை இதன் மூலம் உறுதிசெய்கிறார்கள். இவ்வகையில், வீட்டு வேலை செய்பவர்களுக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் இடையே நிலையான மற்றும் ஆரோக்கியமான பணி உறவை உருவாக்க இந்த அமைப்பு உதவுகிறது,” என்று கூறியுள்ளார்.

சரியான நேரத்தில் சம்பளம் செலுத்துவதற்கு எளிதான, வேகமான மற்றும் டிஜிட்டல் மேம்பட்ட சேனலை WPS வழங்குகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வீட்டு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க, அவர்கள் கையாளும் எந்த நிதி நிறுவனங்களாலும் வழங்கப்படும் ஸ்மார்ட் ஆப்ஸை முதலாளிகள் பயன்படுத்தலாம்.

2009 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட WPS என்பது தனியார் துறையில் தொழிலாளர்களின் ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யும் ஒரு மின்னணு அமைப்பாகும். கடந்த 13 ஆண்டுகளாக இந்த அமைப்பை உருவாக்கி பயன்படுத்துவதில் அமைச்சகம் பெற்ற நீண்ட அனுபவத்திற்குப் பிறகு, வீட்டு உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் WPS-ஐ செயல்படுத்துவது வெற்றிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “WPS ஆனது தனியார் துறையில் நேர்மறை, நிலையான மற்றும் வெளிப்படையான பணி உறவுகளை பராமரித்து வருகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியானது, வீட்டு உதவியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைச்சகத்தின் சமீபத்திய முயற்சியாகும். 2017 ஆம் ஆண்டு முதல், தனியார் வீட்டுப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு அலுவலகங்களின் உரிமங்களைப் புதுப்பிப்பதை அமைச்சகம் நிறுத்தியது, அதற்குப் பதிலாக டாட்பீர் மையங்கள், ஆட்சேர்ப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரே அமைப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுப் பணியாளர்கள், குழந்தைகளை கவனித்துக்கொள்பவர்கள், சமையல்காரர்கள், குடும்ப ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள், தோட்டக்காரர்கள், விவசாயிகள், தனியார் பயிற்சியாளர்கள், தனியார் ஆசிரியர்கள், தனியார் செவிலியர்கள், தனியார் பிரதிநிதிகள், தனியார் விவசாயப் பொறியாளர்கள், மாலுமிகள், மேய்ப்பவர்கள், பருந்து பராமரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து வீட்டு உதவித் தொழில்களுக்கும் இந்த WPS முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!