வளைகுடா நாடுகளில் ஒரு குட்டி மாலத்தீவு..!! எங்குள்ளது தெரியுமா..??

வளைகுடா நாடுகளில் பாலைவன மணல்களை மட்டுமே கண்டு ரசித்த உங்களுக்கு மாலத்தீவினை போன்று வித்தியாசமான அனுபவத்தினை தரும் சுற்றுலாதலத்தை பற்றி தெரியுமா? பிரமிக்க வைக்கும் வெள்ளை மணல் கடற்கரைகளுடன், தெளிவான கண்ணாடி போன்ற கடல் நீருடன் மனதை இதமாக்கி உங்களை வியப்பில் ஆழ்த்தும் ஓரிடம்தான் அது. அப்படி ஒரு இடம் எங்கு இருக்கின்றது என்று தானே யோசிக்கிறீர்கள்… மஸ்கட்டில் இருந்து சுமார் 4 முதல் 5 மணி நேரம் பயணித்தால் பார் அல் ஹிக்மான் (Bar al hikman) எனப்படும் அழகான தனித்தீவுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
உண்மையில் இந்த இடத்திற்கு செல்வதே சவாலான விஷயம்தான். தீவை சுற்றிலும் உங்கள் மொபைல் போனில் நெட்வொர்க் கூட கிடைக்காது என்பதால் பல திரில்லான அனுபவங்கள் நிறைந்ததாக இருக்கும். முற்றிலும் சாலைகள் எதுவும் இல்லாததால் நாம் எங்கே இருக்கிறோம் என்று கண்டுபிடிப்பதற்கு நீங்கள் கண்டிப்பாக திசைகாட்டி கருவியை வைத்திருக்க வேண்டும். இங்கு தனியாக செல்வதை காட்டிலும் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சென்று சுற்றி பார்க்கும் பொழுது பரபரப்பான நகர வாழ்க்கையை ஒதுக்கி வைத்துவிட்டு தனி உலகிற்குள் சென்ற திருப்தியை தரும். நீங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை கண்டறிய கையுடன் ஆஃப்லைன் மேப்பினை கொண்டு செல்வதே சிறந்தது.
உப்பு தண்ணீர் மட்டுமே இருக்கும் என்பதால் குடிக்க தண்ணீரையும் நீங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இந்த பகுதியானது பொதுவாக இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் போன்ற இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடம் ஆகும். மனிதர்கள் மட்டும்தான் உடன் இருக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக விதவிதமான பறவைகள் மற்றும் விலங்குகள் உங்களுடன் துணையாக இருப்பார்கள். ஃபிளமிங்கோக்கள், ஹெரான்கள், சாண்ட்பைப்பர்கள் போன்ற விலங்குகள் மற்றும் இடம்பெயர்ந்த வித்தியாசமான பறவைகள் உங்களை உற்சாகப்படுத்தும். பார்வையாளர்கள் கடலுக்கடியில் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன.
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று கண்டு களிப்பதற்கு ஏதுவாக போட்டிங் வசதியும் உள்ளது. உண்மையில் செல்போன் மற்றும் wi-fi போன்ற விஞ்ஞான தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் இல்லாமல் மனிதர்களுடன் மட்டும் நேரத்தை கழித்து இயற்கையை அனுபவிக்க நினைத்தால் இந்த இடம் உங்களின் சரியான தேர்வாக இருக்கும்.