மஸ்கட்-அபுதாபி இடையே தொடங்கவுள்ள பேருந்து சேவை: டிக்கெட் கட்டணம், பேக்கேஜ் உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு…

ஓமானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் பேருந்து சேவையை வரும் அக்டோபர் 1 முதல் மீண்டும் தொடங்கப்படவிருப்பதாக ஓமானின் தேசிய போக்குவரத்து நிறுவனமான Mwasalat அறிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்று பரவலின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து சேவை, தற்போது மீண்டும் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக Mwasalat நிறுவனம் X தளத்தில் வெளியிட்ட பதிவில், ஓமானின் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி மற்றும் அல் அய்னுக்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த சேவையை நிறுத்துவதற்கு முன், Mwasalat துபாய் மற்றும் மஸ்கட் இடையே பேருந்து சேவையை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மீண்டும் தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவையின் பேக்கேஜ் அலவன்ஸ், டிக்கெட் கட்டணம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையின் முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.
லக்கேஜ் அலவன்ஸ் மற்றும் டிக்கெட் கட்டணம்:
- ஓமானின் மஸ்கட்டில் இருந்து அபுதாபிக்கு ஒரு வழிப் பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 109 திர்ஹம்களாகும் (OMR11.5).
- லக்கேஜ் அலவன்ஸ் – 23 கிலோகிராம் மற்றும் கைப்பையில் 7 கிலோகிராம் வரை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.
- பயண நேரம்: அபுதாபியிலிருந்து மஸ்கட் வரையிலான பயணத்திற்கு கிட்டத்தட்ட 5 மணிநேரம் வரை ஆகலாம்.
உற்சாகத்தில் பயணிகள்:
இந்த பேருந்து சேவை குறித்து ஓமான் அபுதாபி இடையே அடிக்கடி பயணம் செய்யும் செய்யும் நபர்கள் கூறுகையில், விமான கட்டணம் மிகவும் அதிகமாக இருந்ததால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நாட்களில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருந்ததாகவும், துபாயிலிருந்து வரும் பேருந்துகள் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இப்போது அபுதாபியிலிருந்து இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுவதால், நாங்கள் 5 மணி நேரத்தில் மஸ்கட்டை அடையலாம் என்றும் இது நிம்மதியாக உள்ளது என்றும் அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் “ஓமானிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது அபுதாபியில் உள்ள பிரபலமான இடங்களைப் பார்வையிடலாம், எனவே, இது பயணிகளுக்கு ஒரு சிறந்த செய்தி” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.