அமீரக செய்திகள்

அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு ரயில் தொடங்கப்படுமா..?? G20 மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய திட்டம் என்ன..??

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய மத்தியகிழக்கு காரிடார் திட்டத்தில் மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவிற்கான புதிய துறைமுகங்கள் மட்டுமின்றி ரயில் இணைப்புகளும் அடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளரான அவுசப் சயீத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடனான் சந்திப்பின்போது, புதிய முன்மொழிவுகளைப் பற்றி கேட்கப்பட்ட போது, “இந்தியா ரயில்பாதைகளை உருவாக்குவதை விட, ரயில் பாதைகளால் இந்தியா இணைக்கப்படும் என்பது சரியான விளக்கம்” என்று அவர் பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா, சவுதி அரேபியா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த பன்னாட்டு இரயில் மற்றும் துறைமுக ஒப்பந்தமானது, சீனாவின் லட்சியமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (Belt and Road Initiative) பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த காரிடார் திட்டமானது, “சில்க் ரூட் மற்றும் ஸ்பைஸ் சாலைக்கு சமமானதாக (silk route and spice road)” இருக்கும் என்று சவூதி அரேபிய முதலீட்டு அமைச்சர் காலித் அல் ஃபாலிஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஸ்பைஸ் சாலை மற்றும் சில்க் ரூட் என்றால் என்ன?

  • ஸ்பைஸ் வழிகள், கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் கடல் வழிகளின் நெட்வொர்க்கிற்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். அவை ஜப்பானின் மேற்கு கடற்கரையிலிருந்து, இந்தோனேசியா தீவுகள் வழியாக, இந்தியாவைச் சுற்றி மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பா வரை நீண்டுள்ளது.
  • சில்க் ரூட் என்பது கிழக்கு மற்றும் மேற்கு நாகரிகங்களை சீனா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுடன் இணைக்கும் பண்டைய வர்த்தக நெட்வொர்க்குகளின் தொடராகும்.

சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள், புது தில்லிக்கு அரசுமுறைப் பயணம் சென்ற போது, இந்தியாவும் சவுதி அரேபியாவும் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், இந்தியாவுக்கும் GCCக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஹைட்ரோகார்பன் ஆற்றல் கூட்டாண்மையை புதுப்பிக்கத்தக்க, பெட்ரோலியம் மற்றும் மூலோபாய இருப்புக்களுக்கான விரிவான எரிசக்தி கூட்டாண்மைக்கு மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் உட்பட எட்டு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, புதிய காரிடார் திட்டத்தில் துறைமுகங்கள், ரயில்வே, சிறந்த சாலைகள் மற்றும் மின்சாரம், எரிவாயு கட்டங்கள் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. சவூதி முதலீட்டில் 100 பில்லியன் டாலர்களுக்கு கூட்டு பணிக்குழுவை உருவாக்க அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், அதில் பாதி இந்தியாவின் மேற்கு கடற்கரையில் தாமதமான சுத்திகரிப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!