அமீரக செய்திகள்

அமீரகம், ஓமானிலிருந்து இந்தியாவிற்கான விமான சேவையை கைவிடுவதாக அறிவித்த ‘சலாம் ஏர்’.! முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் உறுதி..!!

ஓமானில் மலிவு விலையில் விமானச் சேவையை வழங்கிய முதல் பட்ஜெட் விமான நிறுவனமான சலாம் ஏர், எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஓமானிற்கும் இந்தியாவுக்கும் இடையே இயக்கப்படும் விமான சேவையை நிறுத்தி வைக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓமானின் பட்ஜெட் ஏர்லைனான சலாம் ஏர் இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர், லக்னோ, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நான்கு நகரங்களுக்கு விமானச் சேவையை வழங்கி வந்தது. இந்த மலிவு விலை விமான சேவை மலையாளிகளுக்கு மட்டுமில்லாமல், ஓமானில் வசிக்கும் தமிழகத்தின் கண்ணியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கும் விருப்பமான தேர்வாக இருந்து வந்தது.

அதுமட்டுமில்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தென் மாவட்ட தமிழர்களுக்கும் இது பயணுள்ளதாக இருந்தது. ஏனெனில், அமீரகத்தில் உள்ள புஜைரா விமான நிலையத்திலிருந்து ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கான சலாம் ஏரின் விமான இணைப்புகளும் இந்த இடைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று துபாயில் உள்ள விமானத்தின் தொடர்பு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று வெளியான செய்தி அறிக்கையின்படி, அக்டோபர் 1, 2023 முதல் சலாம் ஏர் கேரியரில் பயணிகளின் முன்பதிவுகள் செல்லாது என்று பயணிகள் மின்னஞ்சல் பெற்றதையடுத்து, இந்தியாவுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பயணத் திட்டங்கள் தற்போது சீர்குலைந்துள்ளது. மேலும், பயணிகள் முன்பதிவுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சலாம் ஏர் விமான நிறுவனத்திடமிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், அக்டோபர் 01, 2023 முதல் இந்தியாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் சலாம் ஏர் விமான சேவை கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “இந்தியாவுக்கான விமான உரிமைகள் ஒதுக்கீடு வரம்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்தச் செய்தி பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதனால் ஏற்படக்கூடிய சிரமங்களுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த மின்னஞ்சலில் கூறியுள்ளது.

அத்துடன், “இந்த செயல்முறை முழுவதும் எங்கள் வாடிக்கையாளர்கள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். எனவே, இந்த இடங்களுக்கு முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் நாங்கள் முழுமையாக பணத்தைத் திருப்பித் தருவோம்” என்றும் சலாம் ஏர் விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!