அமீரக செய்திகள்

UAE: இப்போது Botim ஆப் மூலமாக மூன்றே படிகளில் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் குழுசேரலாம்..!! அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் கட்டாய வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் (ILOE) குழுசேர இப்போது Botim செயலியைப் பயன்படுத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகத்தின் மனிதவளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நாட்டின் தனியார் துறை, மத்திய அரசுத் துறைகள் மற்றும் இலவச மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அடுத்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் குழு சேர வேண்டும்.

அவ்வாறு அமைச்சகம் விதித்த காலக்கெடுவிற்குள் ஒரு ஊழியர் திட்டத்திற்கு குழுசேரவில்லை என்றால், அவருக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. MoHREயின் வழிகாட்டுதலின் படி, ILOE ஆப், இணையதளம், அல் அன்சாரி எக்ஸ்சேஞ், தவ்ஜீஹ் (Tawjeeh) மற்றும் தாஷீல் (Tasheel) பிஸினஸ் சென்டர் மற்றும் கியோஸ்க்குகள் போன்றவற்றை அணுகுவதன் மூலமாகவும் ஊழியர்கள் இத்திட்டத்தில் குழு சேரலாம்.

தற்போது, இந்த வரிசையில் அமீரகத்தின் பிரபலமான ஆடியோ/வீடியோ கால் அப்ளிகேஷனான Botim ஆப் இணைந்துள்ளது. பிரபல அஸ்ட்ரா டெக் (Astra Tech) நிறுவனம், துபாய் இன்சூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து Botim செயலியில் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் இது அரசாங்கம் அறிவித்த கட்டாய காப்பீட்டுத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் முதல் அல்ட்ரா-ஆப்பை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, நீங்கள் Botim இல் மூன்றே படிகளில் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்திற்கு குழுசேரலாம். எப்படி குழு சேர்வது என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்:

  • முதலில் Botim செயலியில் ‘Explore’ பக்கத்தைப் பார்வையிட்டு, பதிவுப் பக்கத்தை அணுகுவதற்கு ILOE இன்சூரன்ஸ் பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், இது உங்கள் வேலை மற்றும் ஊதியத்தைப் பொறுத்து காப்பீட்டு வகையைத் தேர்ந்தெடுக்க தானாகவே உதவுகிறது.
  • இறுதியாக, பதிவை முடிக்க கட்டணத்தைச் செலுத்தவும்.

ILOE திட்டத்தின் படி, ஊழியர்கள் திடீரென வேலையை இழக்கும் போது, ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். குறிப்பாக, 16,000 க்கும் குறைவான அடிப்படை சம்பளம் உள்ள பணியாளர்களுக்கு அதிகபட்சமாக மூன்று மாத இழப்பீடு மாதம் 10,000 திர்ஹம் வரையிலும், 16,000 மற்றும் அதற்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் மூன்று மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 20,000 திர்ஹம் வரையிலும் இழப்பீடாகப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!