அமீரக செய்திகள்

UAE: தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்காமல் நிறுவனத்தை மூடினால் 200,000 திர்ஹம் வரை அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிபவரா நீங்கள்? நிறுவனத்தில் சம்பளம் வழங்காமல் தாமதம் செய்கிறார்களா? ஒருவேளை நிறுவனம் மூடப்பட்டால், கிராஜுட்டி (Gratuity) உள்ளிட்ட நிலுவையில் உள்ள ஊதியத்தை செலுத்துவதற்கு முதலாளி மறுப்பு தெரிவிக்க முடியுமா?

இது போன்ற சூழல்களில் ஒரு ஊழியராக நீங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மற்றும் நிறுவனத்தின் மீது புகார் பதிவு செய்தால் என்ன நடக்கும் போன்ற பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் உள்ளதா? அப்படியானால், நீங்கள் முதலில் அமீரகத்தின் ஊதிய பாதுகாப்பு அமைப்புச் சட்டம் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.

எனவே, தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் உரிமை குறித்து அமீரகத்தின் ஊதிய பாதுகாப்பு அமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்?

ஊதியப் பாதுகாப்பு அமைப்பு (WPS):

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊதிய பாதுகாப்பு அமைப்புச் சட்டத்தின் பிரிவு 1(1) இன் படி, மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தில் (MoHRE) பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும், அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியப் பாதுகாப்பு அமைப்பு (WPS) மூலமாகவோ அல்லது பிற நிதி நிறுவனங்கள் மூலமாகவோ உரிய தேதியில் அதன் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும்.

ஊழியரின் சம்பளம், வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய நாளுக்கு அடுத்த மாதத்தின் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படும். ஒருவேளை, ஊதிய நாள் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றால், ஊழியர் தனது சம்பளத்தை மாதத்திற்கு ஒரு முறையாவது பெற வேண்டும்.

அவ்வாறு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தை பணியாளர்களுக்கு வழங்காத பட்சத்தில், நிறுவனத்திற்கு எதிராக ஆணை-சட்டம் மற்றும் விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அமைச்சகம் எடுக்கலாம். இது 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண். 1 இன் பிரிவு 16(2) க்கு இணங்க, ஆணை-சட்டத்தின் பிரிவு (22) இன் விதிகளுக்கு உட்பட்டது.

மேலும், ஊதிய பாதுகாப்பு அமைப்பு சட்டத்தின் பிரிவு 1(2)இன் படி, வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பளத்தை வழங்காமல் இருந்தால், அது சம்பளம் வழங்குவதில் தாமதமாக கருதப்படும்.

தண்டனைகளும் அபராதங்களும்:

ஒரு நிறுவனம் அல்லது முதலாளி தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தால், சட்ட விதிகளின் அடிப்படையில், நீங்கள் வேலையிலிருந்து வெளியேறுவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக MoHRE க்கு அறிவித்ததும், உங்கள் முதலாளிக்கு தெரிவிக்காமலேயே உங்கள் வேலை ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளலாம் மற்றும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்:

உங்கள் பதவியை ராஜினாமா செய்ததும், முதலாளிக்கு எதிராக MoHRE இல் புகாரை பதிவு செய்யலாம். அப்போதும் உங்கள் முதலாளியுடன் இணக்கமான தீர்வு ஏற்படவில்லை என்றால், MoHRE உங்களுக்கு வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் உங்கள் முதலாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்.

மேலும், ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்காமல் நிறுவனத்தை மூடினால், வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 60(4) இன் படி, 50,000 திர்ஹம் முதல் 200,000 திர்ஹம் வரை முதலாளிக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!