வளைகுடா செய்திகள்

பில்களை செட்டில் பண்ணாதான் ஊருக்கு செல்ல முடியும்.. கடுமையான விதியால் தினறும் வெளிநாட்டவர்கள்.. ஒரே மாதத்தில் 4.8 மில்லியன் தினார் வசூல்..!!

குவைத் நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறும் முன், நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அரசாங்க ஆணையை குவைத் அரசாங்கம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தியிருக்கிறது.

அதனடிப்படையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரையிலும் தரை மற்றும் வான் வழியாக வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக, வெளிநாட்டவர்களிடமிருந்து மின் கட்டணத்திற்கான சுமார் 4.8 மில்லியன் குவைத் தினாரை குவைத் அரசாங்கம் வசூலித்துள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இவ்வாறு நாட்டிலிருந்து கிளம்பும் வெளிநாட்டினரிடமிருந்து கட்டணங்கள் மற்றும் அபராதங்களை வசூலிப்பது எந்த வெளிநாட்டவரின் பயணத்தையும் தாமதப்படுத்தவில்லை என்றும் குவைத் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சகத்தின் (Kuwaiti Ministry of Electricity, Water and Renewal Energy) ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அல் ராய் செய்தித்தாள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

அதேபோல், குவைத்தை விட்டு புறப்படுவதற்கு முன்னதாக வெளிநாட்டவர்கள் அனைவரும் தங்களின் அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் செலுத்துமாறு உள்துறை அமைச்சகமும் வெளிநாட்டவர்களை எச்சரித்துள்ளது. அந்த வகையில், ஆணையை அமல்படுத்துவதில் ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக, செப்டம்பர் முதல் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் உள்துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, உள்துறை அமைச்சகத்துடனான இணைப்பிற்கு முன், ஆகஸ்ட் மாதத்தில் 1.2 மில்லியன் குவைத் தினார்களை மட்டுமே வெளிநாட்டவர்கள் செலுத்தியதாகவும், இணைப்பிற்கு பின் செப்டம்பர் முதல் 4.8 மில்லியன் குவைத் தினார் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, உள்துறை அமைச்சகத்துடனான இணைப்பு, குவைத் அரசின் பணத்தை பாதுகாக்கவும், காலதாமதமான வருவாயை வசூலிக்கவும் சரியான நடவடிக்கை என்றும்,  குறிப்பாக பல வெளிநாட்டவர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தியதாகவும், மின்சார கட்டண கடன்களில் சில அதிகமாக இருந்தாலும் பயணத்திற்கு முன்பே அவற்றைச் செலுத்தினர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏறத்தாழ 4.6 மில்லியன் மக்கள் வசிக்கும் குவைத்தில் சுமார் 3.4 மில்லியன் பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். எனவே, “குவைதிசேஷன்” என்ற முயற்சியின் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பதிலாக அதிகளவிலான குவைத் குடிமக்களை பணியில் அமர்த்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை குவைத் கடுமையாக்கியுள்ளது. அந்தவகையில், சட்டவிரோதமாக வசிப்பவர்களை மறைக்கும் எந்தவொரு வெளிநாட்டவரும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

அதேபோல், தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வேலைக்கு அமர்த்தினால், சட்டத்திற்குப் புறம்பாக தங்குமிடம் மற்றும் சட்டவிரோதமானவர்களை மூடிமறைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குவைத் அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், குவைத் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களின் மொத்த எண்ணிக்கை 150,000 பேர் என உள்துறை அமைச்சகத்தால் மதிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!