வளைகுடா செய்திகள்

ஓமானில் தீவிரமடையும் தேஜ் புயல்.. அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

அரபிக் கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் ஓமன் சுல்தானகத்தின் கரையோரப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், தோஃபர் கவர்னரேட்டிலும், அல் வுஸ்தா கவர்னரேட்டிலுள்ள அல் ஜாசிரின் விலாயத் பகுதியிலும் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department-IMD) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) அன்று ஓமன் மற்றும் ஏமன் கடற்கரைகளுக்கு அருகில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புயல் அக்டோபர் 24 அன்று நண்பகலில் அல் கைதா (ஏமன்) மற்றும் சலாலா (ஓமன்) இடையே கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, இன்று ஞாயிற்றுக்கிழமை ஓமானின் சலாலா துறைமுகமும் மாலை 5 மணி முதல் மூடப்படும் என்றும் அல்-தஹாரெஸ் மற்றும் நியூ சலாலா ஆகிய இரண்டு சுகாதார நிலையங்களும் பிற்பகல் 2:30 மணி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய அபாயங்கள் மற்றும் முன் எச்சரிக்கை மையம் (National Multi Hazards & Early Warning Centre) வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், கடுமையான தேஜ் புயலானது 3வது வகை சூறாவளியாக தீவிரமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, ஓமனின் அருகிலுள்ள கடற்கரையிலிருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள புயல், எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தீவிரமடையும் என்றும், இதனால் கரையோரப் பகுதிகள் கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மணிக்கு 40-70 வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு பிடுங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய கடுமையான சூறாவளியில் இருந்து குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க, ஓமனின் அவசரகால சூழ்நிலைகள் மேலாண்மைக்கான தேசியக் குழு ஹலானியாத் தீவுகள் மற்றும் சலாலா, ரக்யுத் மற்றும் தால்கோட் மாநிலங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, நாட்டில் உள்ள பொதுமக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், குறிப்பாக பள்ளத்தாக்குகளில் இருந்து விலகி இருக்குமாறும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority) பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

ஏற்கனவே, தேஜ் புயலினால் வளைகுடா நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவி வருகின்ற நிலையில், ஓமானில் உள்ள அமீரக குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மஸ்கட்டில் உள்ள ஓமான் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!