சவுதிக்கு ஓட்டுநர் வேலைக்காக செல்பவர் தாய்நாட்டில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸை பயன்படுத்தலாம்..!! எவ்வளவு காலம் தெரியுமா..?
சவுதி அரேபியாவில் வாகன ஓட்டுநர் வேலைக்காக பணியமர்த்தப்படும் வெளிநாட்டவர்கள், தங்கள் சொந்த நாடுகளில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகப் பயன்படுத்தலாம் என்று இராஜ்யத்தின் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த உரிமம் சவுதியில் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சியால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதை வெளிநாட்டு ஓட்டுநர்கள் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும், எனினும் அந்த உரிமத்தின் வகை ஓட்டப்படும் வாகனத்துடன் பொருந்த வேண்டும் என்றும் போக்குவரத்து ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த வகையில், இப்போது ஓட்டுநர் வேலைக்காக வெளிநாடுகளிலிருந்து பணியமர்த்தப்படும் வெளிநாட்டவர்கள் சவுதியின் டிரைவிங் லைசன்ஸை பெரும் வரையிலும் காத்திருக்க அவசியமில்லாமல், தங்களின் தாய்நாட்டில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தையே மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா வரும் விசிட்டர்கள் ஒரு வருடத்திற்கு வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி போக்குவரத்து அதிகாரிகள் கடந்த மாதம் அறிவித்திருந்தனர். அதாவது, வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ராஜ்யத்திற்குள் நுழைந்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த முடியும்.
கடந்த சில ஆண்டுகளாகவே, எண்ணெய் வளத்தை சார்ந்திருக்கும் சவுதியின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டிற்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களையும், வசதிகளையும் இராஜ்ஜியம் செயல்படுத்தி வருகிறது.
சுமார் 32.2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சவுதி அரேபியா, இந்த ஆண்டு 25 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்கு வரவேற்க இலக்கு வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel