அமீரக செய்திகள்

துபாயில் நவீன வடிவமைப்பில் புதிய பேருந்து நிலையத்தை திறந்த RTA..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் புதிதாக நவீன வடிவமைப்பில் ஆட் மேத்தா (oud metha) பேருந்து நிலையத்தைத் திறந்துள்ளது.

இது ஆட் மேத்தா மெட்ரோ நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் இருப்பதால் மெட்ரோ மற்றும் டாக்ஸி சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங், பைக் ரேக்குகள், அலுவலக இடங்கள், வாடிக்கையாளர் சேவை பகுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சுய சேவை கியோஸ்க்கள் (self-service kiosks) போன்ற ஒருங்கிணைந்த வசதிகள் மூலம் பொது போக்குவரத்து சேவைகளில் இந்த நிலையம் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள்

இந்த நிலையம் 9,640 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, இது ஆட் மெத்தா மெட்ரோ நிலையம், பள்ளிகள், சமூக கிளப்புகள் மற்றும் வணிக மையங்களுக்கு அருகில், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நிலையம் பேருந்து நிறுத்தங்கள், டாக்ஸி ஸ்டாண்டுகள் மற்றும் தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை நிர்ணயித்திருப்பதால் அதன் வடிவமைப்பு இப்பகுதியில் உள்ள பொது போக்குவரத்து வழிமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 10,000 பயணிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட் மெத்தா பஸ் நிலையத்தில் ஏராளமான வசதிகள் உள்ளன, அவை பேருந்துகளுக்கு 9 செயல்பாட்டு பார்க்கிங் இடங்கள், சேவையில் இல்லாத பேருந்துகளுக்கு 11 பார்க்கிங் இடங்கள், வாகனங்களுக்கு 350 பார்க்கிங் இடங்கள், 23 சைக்கிள் ரேக்குகள், பயணிகள் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் பகுதிகள் ஆகியவை அடங்கும்.

அத்துடன் காத்திருப்பு மற்றும் அவசரகால பேருந்துகளுக்கான வாகன நிறுத்தம், டாக்சிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பார்க்கிங் இடங்கள், பொதுமக்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட இடங்கள், ஓட்டுநர்களுக்கான கஃபே மற்றும் ஓய்வு பகுதி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரார்த்தனை அறைகள், பணியாளர்கள் அலுவலகங்கள் மற்றும் பொது கழிப்பறைகள் ஆகிய வசதிகளும் இந்த நிலையத்தில் உள்ளன.

இந்த பேருந்து நிலையம் எட்டு பேருந்து வழித்தடங்களுக்கு சேவை செய்கிறது. அவற்றில் ஏழு பொது போக்குவரத்து பாதைகளுக்கு சேவை செய்கின்றன, மற்றொன்று மெட்ரோ இணைப்பாக செயல்படுகிறது. துபாய் மால், அல் குசைஸ், புர்ஜுமான், துபாய் மியூசியம், இன்டர்நேஷனல் சிட்டி, வாஃபி சிட்டி, அல் சீஃப், பிசினஸ் பே, அல் நஹ்தா, அல் சஃபா மற்றும் அல் சத்வா போன்ற நகரத்தின் முக்கிய இடங்களையும் பகுதிகளையும் இணைக்கும் இந்த வழித்தடங்களில் 40 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

நிறைவு பெற்ற பேருந்து நிலையங்கள்

RTA அல் குபைபா, அல் ஜாலியா, எடிசலாட் மற்றும் யூனியன் பேருந்து நிலையங்கள் என நான்கு பொது பேருந்து நிலையங்களை சமீபத்தில் திறந்தது.

அல் குபைபா பேருந்து நிலையம் ஆறு கட்டிடங்களைக் கொண்டது மற்றும் 2,452 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு நாளைக்கு 15,000 பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது.

அல் ஜலியா பேருந்து நிலையம் ஒரு பஸ் டெர்மினல் மற்றும் ஒரு தரை தளம், இரண்டு தளங்கள் மற்றும் கூரை நிறுத்தம் (rooftop parking) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த நிலையம் மொத்தம் 19,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் ஒரு நாளைக்கு 7,000 பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது.

தேராவில் உள்ள யூனியன் பேருந்து நிலையம் மூன்று கட்டிடங்களைக் கொண்டது. இந்த நிலையம் 2,180 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது மற்றும் ஒரு நாளைக்கு 7,500 பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது.

எடிசலாட் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள எடிசலாட் பேருந்து நிலையம், தரை தளம் மற்றும் மெஸ்ஸானைன் தளம் கொண்டது. இந்த நிலையம் 708 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு நாளைக்கு 4,500 பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!