அமீரக செய்திகள்

UAE: பயணிகளின் வசதிக்காக பொதுப் பேருந்துகளில் புதிய கட்டண முறையை அறிமுகம் செய்த அபுதாபி..!!

அபுதாபியின் போக்குவரத்து ஆணையம் செவ்வாயன்று எமிரேட்டில் உள்ள அனைத்து பொதுப் பேருந்துகளுக்கும் ஒருங்கிணைந்த கட்டணத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு அடிப்படை பேருந்து கட்டணம் இப்போது 2 திர்ஹம்ஸாகவும், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 5 ஃபில்ஸ் ஆகவும் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பேருந்து பயணத்தின் அதிகபட்ச கட்டணம் 5 திர்ஹம்ஸ் எனவும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பயணி தனது இறுதி இலக்கை அடைய ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்தில் பயணிக்கும் போது மற்றும் அபுதாபி சிட்டியில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும்போது அல்லது திரும்பும்போது அவர் 2 திர்ஹம்ஸ் அடிப்படை கட்டணத்தை பல முறை செலுத்த வேண்டியதில்லை என்பதையும் ITC தெளிவுப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ஒரு பயணி வேறொரு பேருந்து மாறும் போது ஒவ்வொரு பேருந்திற்குமான அடிப்படை கட்டணம் 2 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியாக, பயணத்தின் முடிவில் ‘hafalat’ ஸ்மார்ட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தப்பட்டால், பயணிகள் ஏறும் இடத்திலிருந்து கடைசியாக இறங்கும் வரையிலான செலவு கணக்கிடப்படும் என்று ITC தெரிவித்துள்ளது.

இருப்பினும், ‘பஸ்களின் இலவச மாற்றம்’ பின்வரும் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டது:

  1. பயணிகள் உரிய நேரத்திற்குள் பேருந்தை மாற்ற வேண்டும்
  2. மாற்றங்களின் எண்ணிக்கை இரண்டு பேருந்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதாவது அதிகபட்சம் மூன்று பேருந்துகளைப் பயன்படுத்தி பயணத்தை முடிக்க வேண்டும்.
  3. திரும்பும் பயணத்திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.

அதே சமயம் பயணிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் முன்பும் தங்கள் கார்டுகளை ஸ்வைப் செய்து பயணச் செலவைக் கணக்கிட வேண்டும். பயணத்தின் முடிவில் தங்கள் கார்டுகளை ஸ்வைப் செய்யத் தவறியவர்களுக்கு அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!