அமீரக செய்திகள்

அமீரக அரசு இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி விட்டதாக பரவும் செய்தி.. MoHRE அளித்த விளக்கம் என்ன??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில நிறுவனங்களால் தெற்காசிய நாட்டைச் சேரந்த ஊழியர்களுக்கான வேலை விசாக்களை வாங்க முடியவில்லை என்ற செய்திகள் ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட முக்கியமான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய விசாக்களை வாங்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதாவது, ஒரு குறிப்பிட்ட தேசத்தைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், அதே நாட்டினருக்கு புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது​ பணியமர்த்தும்போது, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகவும், அந்த நிறுவனங்கள் மக்கள்தொகை பன்முகத்தன்மையை அடைய வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமீரகத்தில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்காளதேசியர்களுக்கு விசா வழங்குவதை ஐக்கிய அரபு அமீரக அரசு நிறுத்திவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொழில் வல்லுநர்கள் மற்றும் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MOHRE) படி, நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்தும் போது, முதல் 20 சதவீதம் வெவ்வேறு நாட்டினருக்கு ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதாவது ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களே முதல் 20 சதவீத ஊழியர்களாக இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நிறுவனங்களின் மக்கள்தொகை பன்முகத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஊழியர்களுடன் தொடர்புடையது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நிறுவனங்கள் இவ்வாறு புதிய ஊழியரை பணியமர்த்தும் போது பன்முகத்தன்மையை அடைவதற்கான இந்த செய்தியைப் பெற்றால், வேறொரு நாட்டவரின் பணியாளரை வேலைக்கு அமர்த்த முயற்சிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நபருக்கான விசாவிற்கு விண்ணப்பித்து, அது பல்வகைப்படுத்தலின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டால், பன்முகத்தன்மை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் அதே வேலைக்கு வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரதிநிதி விளக்கமளித்துள்ளார். அதேபோல், நிறுவனங்கள் 20% பன்முகத்தன்மையை அடைந்தவுடன், எந்தவொரு நாட்டினரையும் பணியமர்த்தலாம் என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

துபாயை தளமாகக் கொண்ட ப்ராஃபவுண்ட் பிசினஸ் சர்வீஸின் நிர்வாக இயக்குனர் ஃபிரோஸ்கான் என்பவர் கூறுகையில், பல்வேறு பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் இந்திய விண்ணப்பதாரருக்கு விசா கிடைத்தது. இருப்பினும், பெரும்பான்மையான இந்திய ஊழியர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் விண்ணப்பதாரருக்கு ஒன்றைப் பெற முயற்சித்தபோது, ‘பன்முகத்தன்மையை அடையுங்கள்’ என்ற செய்தி பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல நிறுவனங்களில் பெரும்பான்மையான இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்காளதேசிகள் பணியாளர்களாக உள்ளனர். எனவே, ஒரு நிறுவனத்தில் ஏற்கனவே இந்த மூன்று நாட்டினரைச் சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் இருந்தால், அதே நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அல் மாஸ் பிசினஸ்மென் சேவையின் பொது மேலாளர் அப்துல் கஃபூர் என்பவரும் கூறியுள்ளார்.

MoHRE இன் பன்முகத்தன்மை விதியானது, UAE இன் சமூக மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை தனியார் துறையில் உள்ள நிறுவனங்களின் முக்கிய மதிப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், பன்முகத்தன்மை விதி இலவச மண்டலங்களில்(Free zone) செயல்படும் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்றும், இதுவரை, இது பிரதான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறுகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!