அமீரக செய்திகள்

அமீரக புத்தாண்டு கொண்டாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு விதிகளை பின்பற்ற அறிவுறுத்திய காவல்துறை..!!

2023 ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அமீரகம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்படவுள்ள நிலையில் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அல் அய்ன் முதல் அபுதாபி சிட்டி, மேற்கில் அல் தஃப்ரா வரையுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய எமிரேட்டான அபுதாபியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளன.  

இதனையொட்டி அபுதாபி காவல்துறையானது அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான கொண்டாட்டத்திற்கான விரிவான திட்டங்களைச் செய்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அனைத்து சுற்றுலாப் பகுதிகள் மற்றும் வணிக மையங்களைப் பாதுகாப்பதற்காகவும் கூட்டுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளதாக மத்திய செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரல் அஹ்மத் சைஃப் பின் ஜெய்துன் அல்-முஹிரி தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு அபுதாபியில் ஓரிரு சாலை மூடல்கள் மற்றும் சில வாகனங்களுக்கு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கனரக வாகனங்கள், லாரிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் சனிக்கிழமை காலை 7 மணி முதல் 24 மணி நேரத்திற்கு அபுதாபி ஐலேண்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பொது சுத்தம் செய்யும் நிறுவன வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அல் மரியா ஐலேண்டிற்கு செல்லும் இரண்டு பாலங்கள் (அல் மரியா ஸ்ட்ரீட் மற்றும் ஹம்தான் பின் முகமது ஸ்ட்ரீட்டின் ஒரு பகுதி) வாணவேடிக்கையை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணி வரை இரு திசைகளிலும் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்கள் நடைபெறும் சமயங்களில் சமூக உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றும் மத்திய செயல்பாட்டுத் துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கொண்டாட்டங்களின் போது வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், மொபைல் போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தை ஓட்டும்போது கவனத்தை சிதறடிப்பதைத் தவிர்க்க வேண்டும், மற்ற வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை விட்டுச் செல்ல வேண்டும் என  இயக்குனரகம் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், குடியிருப்பாளர்கள் அவசரகால எண்ணான 999க்கு டயல் செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!