அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வேலை நாள்..!! குடியிருப்பாளர்கள் காணவிருக்கும் மாற்றங்கள் என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2022 ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வார வேலை நாட்கள் சட்டத்தின்படி, வெள்ளிக்கிழமையானது அமீரகவாசிகளுக்கு இன்று முதல் வேலை நாளாக தொடரப்படவுள்ளது. அமீரக அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் வெள்ளிக்கிழமை அரைநாள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநாள் என இரண்டரை நாட்களை புதிய வார விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அமீரகத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுநாள் வரையிலும் வெள்ளிக்கிழமை என்றாலே அது வார விடுமுறை நாள் என்று அறியப்பட்டு வந்த அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இன்று முதல் புதியதொரு மாற்றத்தை கண்டுள்ளனர். பொதுவாக வெள்ளிக்கிழமை நாட்களில் அமீரகத்தின் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படும். ஆனால் இன்றோ வழக்கம்போல் அமீரக சாலைகள் போக்குவரத்து நெரிசலாகவும், மக்கள் கூட்டமாகவும் காணப்படுகிறது.

மேலும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு சிறப்பு தொழுகை இருப்பதனாலும், வெள்ளிக்கிழமை என்பது ஒரு இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு சிறந்த நாளாக கருதப்படுவதாலும் அரபு நாடுகள் அனைத்திலும் வெள்ளிக்கிழமையே வார விடுமுறை நாளாக இத்தனை வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரபு நாடுகளிலேயே முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் தனது வார விடுமுறை நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியுள்ளது.

எனினும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை கருத்தில் கொண்டே அரசு ஊழியர்களுக்கு அரைநாள் மட்டும் வேலை நாளாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இஸ்லாமிய காலண்டரின் அடிப்படையில் இதுநாள் வரையிலும் தொடரப்பட்டு வந்த வெள்ளிக்கிழமை தொழுகை நேரமும் மாற்றப்பட்டு இன்று முதல் மதியம் 1.15 மணிக்கு மேல் சிறப்பு தொழுகை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறையும், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இரண்டு மணி நேர இடைவேளையையும் அளித்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் தனியார் துறையில் பணிபுரியும் அமீரக குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டு வந்த நிலையில் இனி அதற்கான வாய்ப்புகள் ஏதேனும் பொது விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமையில் வந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

மேலும் நண்பர்களாக ஒரே அறையில் தங்கியிருந்து இதுநாள் வரையிலும் ஒன்றாக சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்களும் கூட இனிமேல் ஆங்காங்கே தங்களின் அலுவலகத்திற்கு அருகாமையிலும், வேலை செய்யும் இடத்திற்கு அருகாமையிலும் உள்ள மஸ்ஜிதுகளில் தொழ கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் வரை வழிபாட்டாளர்களால் நிறைந்து காணப்பட்ட குடியிருப்பு பகுதியில் இருக்கும் மஸ்ஜிதுகள் இந்த வாரம் முதல் அதற்கு நேர் மாறாகவே காணப்படும்.

இது தவிர, கடந்த ஆண்டு வரையிலும் வெள்ளிக்கிழமை என்பது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் பொதுவான விடுமுறை நாளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசின் தற்போதைய அறிவிப்பில் நிறுவன முதலாளிகளே தங்களின் விடுமுறை நாளை நிர்ணயித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், சில நிறுவனங்கள் சனிக்கிழமையை விடுமுறை நாளாகவும், சில நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது. இதனால் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல்களில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

இருப்பினும் அமீரகத்தை தவிர மற்ற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வெள்ளிக்கிழமையே வார விடுமுறை நாளாக தொடரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!