அமீரக செய்திகள்

UAE: இந்திய தொழிலாளர்களுக்கென புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்.. நன்மைகள் என்ன.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் ஏராளமானோர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் நலனுக்காக அமீரக அரசாங்கமும் இந்தியத் துணைத் தூதரகமும் பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றன.

அந்த வகையில், தற்பொழுது அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கென புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்து அல்லது இயற்கை காரணங்களால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 75,000 திர்ஹம்ஸ் வரை இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கென மார்ச் 1ஆம் தேதி முதல் உயிர் பாதுகாப்புத் திட்டம் (Life Protection Plan-LPP) என்றழைக்கப்படும் புதிய காப்பீட்டுத் திட்டம்  அமலுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளது.

மேலும், உயிர் பாதுகாப்புத் திட்டம் (LPP) என்பது அமீரகத்தில் பணிபுரியும் 2.27 மில்லியன் புளூ காலர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளில் உள்ள பலன்களை அதிகரிக்கும் வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதாவது, நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் சுகாதாரக் காப்பீடு மற்றும் பணி தொடர்பான காயங்கள் மற்றும் பணியிட மரணங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், தொழிலாளர்கள் திடீரென விபத்திலோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்திற்கு கட்டாய இழப்பீடு வழங்கப்படுவதில்லை.

இதனால் நாட்டில் பணிபுரியும் ஒரு தொழிலாளி இறந்துவிட்டால், அந்த தொழிலாளியின் உடலை நாட்டிற்கு திருப்பி அனுப்பும் செலவுகளுக்கு கூட நிதி இல்லாமல் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் தடுமாறுகின்றன. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகவே புளூ தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமீரகத்தின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் இரண்டு காப்பீட்டு சேவை வழங்குநர்களுக்கு இடையேயான சந்திப்பை இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இரண்டு காப்பீட்டு நிறுவனங்களும் புளூ காலர் தொழிலாளர்களுக்காக பிரத்யேக காப்பீட்டு திட்டத்திற்கு வேலை செய்ததாகவும், பின்னர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி ஆட்சேர்ப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர பிரீமியங்கள், நன்மைகள்:

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் 18 முதல் 70 வயதுடைய தனிநபர்களுக்கு 37 திர்ஹம்ஸ் முதல் 72 திர்ஹம்ஸ் வரையிலான வருடாந்திர பிரீமியங்கள் வழங்கப்படுகிறது.

எனவே, காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளி விபத்து அல்லது இயற்கையான காரணங்களால் உயிரிழந்தால், அவர் தேர்ந்தெடுத்த ப்ரீமியத்தைப் பொறுத்து, அவரது குடும்பத்திற்கு 35,000 திர்ஹம்ஸ் முதல் 75,000 திர்ஹம் வரை இழப்பீடு கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல், அமீரகத்தில் பணிபுரியும் போது உயிரிழந்த பணியாளரின் உடலை தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கு 12,000 திர்ஹம்ஸ் கவரேஜையும் இந்தத் திட்டம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

பாலிசி விவரம்:

  • வருடாந்திர பிரீமியம் 72 திர்ஹம்ஸ் கொண்ட பாலிசிக்கு, இழப்பீடு 75,000 திர்ஹம்ஸ் ஆகும்.
  • 50 திர்ஹம் கொண்ட பாலிசிக்கான இழப்பீடு தொகை 50,000 திர்ஹம்ஸ் ஆகும்.
  • 37 திர்ஹம்ஸ் கொண்ட பாலிசிக்கான இழப்பீடு தொகை 35,000 திர்ஹம்ஸ் ஆகும்.

தொழிலாளர்கள் உயிரிழப்பு:

2022 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி, துபாயில் பதிவான 1,750 இறப்புகளில் 1,100 பேர் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. இதேபோன்று 2023 இல் பதிவான 1,513 மரணங்களில் 1,000 பேர் தொழிலாளர்கள் எனவும், இந்த இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இயற்கையான காரணங்களால் ஏற்பட்டவை என்றும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

சுமார் 3.5 மில்லியன் இந்தியர்கள் வாழும் அமீரகத்தில், 65 சதவீதம் பேர் புளூ காலர் தொழிலாளர்கள் என்று தெரிவித்த துபாயின் இந்தியத் தூதரகம், ஒரு வருடத்தில் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் இயற்கை மரண நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இறந்தவரின் குடும்பத்திற்கு சில நிதிச் சலுகைகளை வழங்குவதற்காக, அனைத்து நிறுவனங்களையும் LPP திட்டத்தை கருத்தில் கொள்ளுமாறு இந்திய துணைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!