அமீரக செய்திகள்

UAE: வேலை தேடுபவர்கள் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம்..!! மோசடி குறித்து அமீரகத்தின் மிகப்பெரிய நிறுவனங்கள் எச்சரிக்கை….

ஐக்கிய அரபு அமீரகத்தில் லாபகரமான புதிய வேலைகள் மற்றும் ஆண்டு முழுவதும் நல்ல சம்பளத்துடன் தொழில் என்று ஆசையைத் தூண்டும் வரிகளுடன் கூடிய போலியான வேலை வாய்ப்பு பற்றிய மின்னஞ்சல்கள் வேலை தேடுபவர்களின் இன்பாக்ஸில் குவிந்து வருகின்றன. இதன் மூலம், மோசடி கும்பல்கள் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதுடன் பண மோசடியும் செய்கின்றனர் என கூறப்படுகினது.

அமீரகத்தில் தொடர்ந்து இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் நடைபெறுவதால், தேசிய விமான நிறுவனங்களான Emirates மற்றும் Etihad, Al Futtaim குழுமம் மற்றும் கிங்ஸ் கல்வி உள்ளிட்ட பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளன.

Al Futtaim நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை:

அமீரகத்தில் சில்லறை வணிகம், நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றில் 35,000க்கும் மேற்பட்ட நபர்களைப் பணியமர்த்தியுள்ள அல் ஃபுத்தைம் குழுவானது இது குறித்து தெரிவிக்கையில், பெரும்பாலான மோசடி மின்னஞ்சல்களில், போலியான வேலைவாய்ப்புச் சலுகைகள், விண்ணப்பத்தைச் செயலாக்க பணம் செலுத்துதல் அல்லது உங்கள் விசாவைச் செயலாக்குவதற்கான கட்டணம் ஆகியவற்றைக் கோரும் உள்ளடக்கம் இடம் பெற்றிருக்கும்.

உண்மையில், எந்தவொரு Al Futtaim வணிகமும் வேலை விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கான கட்டணம் அல்லது விசாவிற்கான கட்டணங்களைக் கோராது என்பதை ஆன்லைன் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

எதிஹாட் ஏர்வேஸ் வழங்கிய ஆலோசனை:

எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் கேபின் க்ரூவாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இதே போன்ற வழிகாட்டுதலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆட்சேர்ப்பு செயல்முறையின் எந்த நிலையிலும் எதிஹாட் நிறுவனம் விண்ணப்பக் கட்டணத்தைக் கோராது. எப்போதும் @etihad.ae என்று முடிவடையும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து மட்டுமே, விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொள்ளும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை குறிவைக்கும் மோசடி:

மோசடி கும்பல் Kings’ Education என்ற புகழ்பெற்ற கல்வி நிறுவன அடையாளத்தைப் பயன்படுத்தியும் வேலை தொடர்பாக ஏமாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற வேலை வாய்ப்புகளுக்கு பதிலளித்தால், அடையாளம், தனிப்பட்ட அல்லது ரகசிய தகவல் திருட்டு அல்லது நிதி மோசடிக்கு ஆளாவீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Kings’ Education தரப்பில் கூறியதாவது; “எங்கள் கல்வி நிறுவனம் மற்றும் ஆட்சேர்ப்பு கூட்டாண்மை அமைப்புகள் ஆட்சேர்ப்பு செயல்முறையின் எந்த நிலையிலும் வேலை தேடுபவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கவோ அல்லது பணம் டெபாசிட் செய்யும்படியோ கேட்காது” என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அமீரகத்தில் விண்ணப்பதாரர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் எதுவும் இல்லை, எனவே அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. குறிப்பாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் விளம்பரங்களுக்குப் பதிலளிப்பதற்கு முன், அந்தப் பாத்திரத்திற்கான சராசரி சம்பளத்தை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உதாரணமாக HR மேனேஜர் பதவிக்கு 50,000 திர்ஹம் செலுத்துவதாக விளம்பரம் செய்தால், அது போலியானதாக இருக்கும், எனவே மக்கள் தாங்கள் தேடும் பதவிக்கான சராசரி சம்பளம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏமாந்து நின்ற செவிலியர்கள்:

கடந்த 2021 ஆம் ஆண்டில், இல்லாத வேலைகளுக்கு 4,500 திர்ஹம் மாதச் சம்பளம் தருவதாகக் கூறியதை நம்பி, அமீரகத்தை நோக்கி படையெடுத்த இந்தியாவைச் சேர்ந்த 90 செவிலியர்கள் பல்லாயிரக்கணக்கான திர்ஹம்களை பறிகொடுத்துள்ளனர். இதனையடுத்து, நாட்டின் தனியார் சுகாதார வழங்குநரான VPS நாடு முழுவதும் உள்ள 10 மருத்துவமனைகளில் ஒவ்வொரு செவிலியர் வேலைகளையும் வழங்க முன்வந்துள்ளது.

இந்த மோசடி குறித்து VPSஇன் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் Burjeel Holdings தரப்பு பேசுகையில், “எங்கள் பதிவு செய்யப்பட்ட இணையதளத்தைத் தவிர வேறு எந்த டொமைன் பெயரிலிருந்தும் நாங்கள் வேலை வாய்ப்புகளை அனுப்புவதில்லை, ஜிமெயில், ரெடிஃப்மெயில், யாகூ மெயில் அல்லது ஹாட்மெயில் போன்ற இலவச மின்னஞ்சல் சேவைகளிலிருந்தும் நாங்கள் அனுப்புவதில்லை” என்று எச்சரித்தது.

மேலும், இத்தகைய மோசடிகளைச் செய்யும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை உட்பட சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை புர்ஜீல் ஹோல்டிங்ஸ்க்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான விழிப்புணர்வு வழிகாட்டி:

  • அமீரகத்தில் உங்களுக்கு வேலை வழங்கப்பட்டால், அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) வழங்கிய சலுகைக் கடிதத்தைப் பெற வேண்டும்.
  • உங்கள் வேலைவாய்ப்பின் செல்லுபடியை தங்கள் நாட்டில் உள்ள அமீரக தூதரகத்தில் சரிபார்க்கலாம். MOHRE இணையதளத்தில் வேலை வழங்கும் நிறுவனத்தின் செல்லுபடியை சரிபார்க்க வேலை வாய்ப்பு எண்ணைப் பயன்படுத்தலாம்.
  • ஒருபோதும், விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா அமீரகத்தில் வேலை செய்வதற்கான உரிமையை உங்களுக்கு வழங்காது. அவ்வாறு வேலை செய்தால், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அமீரக தொழிலாளர் சட்டத்தின்படி ஆட்சேர்ப்புச் செலவுகளை முதலாளியே ஏற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
  • உங்களுக்கு வேலை வழங்கிய நிறுவனம் சட்டப்பூர்வமாக இருப்பதை உறுதி செய்ய, https://ner.economy.ae/ என்ற நேஷனல் எகனாமிக் ரெஜிஸ்டரில் நிறுவனத்தின் ஆங்கிலம் மற்றும் அரபு பெயரைத் தேடலாம் மற்றும் நிறுவனத்தின் விவரங்களைப் பெறலாம்.
  • 00 971 6802 7666 என்ற MoHRE இன் தொலைபேசி எண்ணில் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் அல்லது mailto:[email protected] என்ற சேவையில் அரட்டை மூலம் கேள்விகளை கேட்கலாம்.
  • நீங்கள் ஆஃபர் லெட்டரில் கையொப்பமிட்ட பிறகு, அமீரகத்திற்குள் நுழைவதற்கான வேலைவாய்ப்பு விசாவை முதலாளி உங்களுக்கு அனுப்புவார். அவ்வாறு வழங்கப்பட்ட விசாவின் செல்லுபடியை பின்வரும் லிங்க்களில் சரிபார்க்கலாம்.
  • துபாய்க்கான விசா செல்லுபடியை உறுதி செய்ய – https://www.gdrfad.gov.ae/en
  • அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராஸ் அல் கைமா அல்லது புஜைரா ஆகிய எமிரேட்களுக்கான விசா செல்லுபடியை சரிபார்க்க – https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/login
  • விண்ணப்பதாரர் அமீரகத்திற்கு வெளியே இருக்கும் போது, குடியிருப்பு விசாவை செயல்படுத்த முடியாது. விண்ணப்பதாரர் நாட்டில் நுழையும் அனுமதியின் பேரில் நாட்டிற்குள் நுழைந்தால் மட்டுமே குடியிருப்பு விசா வழங்க முடியும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!