அமீரக செய்திகள்

உக்ரைனுக்கு 30 டன் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்து உதவிய அமீரகம்..!!

ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே நிலவி வரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசானது அவசரகால நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, திங்களன்று 30 டன் அவசரகால சுகாதார உதவி மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானத்தை அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

போர் காரணமாக இடம்பெயர்ந்த உக்ரைன் குடிமக்கள் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள அகதிகளுக்கு ஆதரவளிக்க சர்வதேச மனிதாபிமான வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் அமீரகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரையிலும் உக்ரைன்-ரஷ்யா மோதல் காரணமாக 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமீரகம் அனுப்பியுள்ள விமானம் போலந்தின் லுப்ளினில் தரையிறங்கியுள்ளது மற்றும் மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் உக்ரைனுக்கு கொண்டு செல்ல போலந்தில் உள்ள உக்ரைன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் சலீம் ஏ அல் காபி இது பற்றி கூறுகையில், “மருத்துவப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளுடன் ஒரு விமானத்தை அனுப்புவது, அத்தியாவசிய மனிதாபிமான தேவைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். மோசமடைந்து வரும் சூழ்நிலையில் எங்களால் முடிந்த மனிதாபிமான உதவி இது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு மனிதாபிமான அவசரநிலையையும் சமாளிக்க உலகின் அனைத்து மக்களுக்கும் துணை நிற்கும் ஐக்கிய அரபு அமீரக தலைமையின் அர்ப்பணிப்பின் மையக் கோட்பாடான, அவசரகால உதவி மற்றும் தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை ஆதரிக்கும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்றுவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசரகால முறையீடு மற்றும் உக்ரேனிய அகதிகளுக்கான பிராந்திய மறுமொழித் திட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் 18.36 மில்லியன் திர்ஹம் (5 மில்லியன் டாலர்) நன்கொடையை அரசு அறிவித்துள்ளதாகவும் அல் காபி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!