அமீரக செய்திகள்

2030ம் ஆண்டுக்குள் 178,000 வேலைகளை உருவாக்க அபுதாபி இலக்கு..!! திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பட்டத்து இளவரசர்..!!

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அபுதாபி நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் காலீத் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், அபுதாபி எமிரேட்டில் வரும் 2030ம் ஆண்டுக்குள் சுமார் 178,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அபுதாபி நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஷேக் காலீத், ​​சமீபத்திய அரசாங்கத் திட்டங்கள், முன்னேற்றங்கள் மற்றும் முன்முயற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக சேவைகளை வலுப்படுத்துவதன் மூலம் குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களையும் அவர் மதிப்பாய்வு செய்துள்ளார்.

அபுதாபியில் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை ஆண்டுதோறும் 90 பில்லியன் திர்ஹம்சாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, அபுதாபி சுற்றுலாத் துறை வியூகம் 2030 (Abu Dhabi Tourism Sector Strategy 2030) எனும் முயற்சியை அபுதாபி அரசு தொடங்கியுள்ளது.

அதற்கேற்ப ஆண்டுதோறும் 39.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த முன்முயற்சியின் மூலம் அபுதாபி எமிரேட்டில் சுற்றுலாத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கணிசமாக உயரும் என்றும், சுற்றுலாத்துறையில் அதிகளவில் பங்களிக்கும் ஹோட்டல் துறையின் வளர்ச்சி பலமடங்கு உயரும் என்பதால் வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த துறையில் வேலை வாய்ப்புகள் மற்ற துறைகளை விடவும் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்களின் மூலம் சுற்றுலாத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் 178,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபியின் பொருளாதார விஷன் 2030 இன் நோக்கங்களுக்கு ஏற்ப, சுற்றுலாத் துறையில் திறமைகளை வளர்த்து, அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் துறையின் பங்கை வலுப்படுத்துவதையும் இந்த மூலோபாயம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது சுற்றுலா வளர்ச்சியில் தனியார் துறை முதலீட்டை தொடர்ந்து ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இது நிலையான சுற்றுலா முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு, சுற்றுலா சேவைகளை மேம்படுத்துவதற்கும், தனித்துவமான இடங்கள் மற்றும் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை அரசு ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி கடந்த 2023 ஆம் ஆண்டில், 24 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது. இது 2022 ஐ விட 30 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக, சுற்றுலாத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 பில்லியன் திர்ஹம்ஸ் பங்களித்து அபுதாபியின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. அதில் ஹோட்டல் துறை மட்டும் பொருளாதாரத்தில் 6.4 பில்லியன் திர்ஹம்ஸ் பங்களித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!