அமீரக செய்திகள்

அமீரக குடியிருப்பாளர்களுக்கு புகைப்பட போட்டியை அறிவித்த RTA..!! கேமரா, எக்ஸ்போ பாஸ்களை பரிசாக வெல்லும் வாய்ப்பு..!!

எக்ஸ்போ 2020 துபாய் கண்காட்சியை முன்னிட்டு அமீரக குடியிருப்பாளர்களுக்கு புகைப்பட போட்டியை தொடங்குவதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் RTA அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் பரிசாக கேமராக்கள் மற்றும் உலகின் மிகச்சிறந்த எக்ஸ்போ 2020 துபாய் நிகழ்ச்சியில் நுழைவதற்கான பாஸ்களை வெல்லும் வாய்ப்பையும் RTA வழங்குகிறது.

RTA அறிவித்துள்ள இந்த சிறந்த புகைப்படத்திற்கான போட்டி மூன்று கட்டங்களாக நடத்தப்படும் எனவும் அதன் முதலாம் கட்டம் பொதுப் போக்குவரத்து தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த மாதம் அக்டோபரில் தொடங்கப்படும் என்றும் RTA கூறியுள்ளது. மக்கள் தங்கள் இடங்களிலிருந்து எக்ஸ்போ தளத்திற்குச் செல்வதற்கு பொது போக்குவரத்தை முதல் விருப்பமாக தேர்வு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டி நடத்தப்படவுள்ளது. மேலும் இந்த பயணம் துபாய் மெட்ரோ மற்றும் எக்ஸ்போ ரைடர்ஸின் ரூட் 2020 பயணத்தை உள்ளடக்கியது என்றும் RTA தெரிவித்துள்ளது.

போட்டியின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் நவம்பரில் தொடங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் எக்ஸ்போ கண்காட்சி நடக்கும் இடத்திற்கு பயணிக்கும் போது துபாய் நகரத்தின் அடையாள சின்னங்கள் மற்றும் கண்ணை கவரும் இடங்களை போட்டோ எடுக்க வேண்டும். மேலும் இந்த இரண்டாம் கட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட சாலை நெட்வொர்க்குகள், மேம்பாலங்கள் மற்றும் சர்வீஸ் ரோடுகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

புகைப்பட போட்டியின் இறுதி கட்டமான மூன்றாவது கட்டம் ஜனவரியில் தொடங்கப்படும். இதில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும் கலாச்சார சுற்றுலாத் தலங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த மால்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். RTA அறிவித்திருக்கும் இந்த புகைப்பட போட்டிகள் பல சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களின் சமூக ஊடக கணக்குகள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் இப்போட்டியின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களே அறிவிப்பார்கள் என்றும் RTA தெரிவித்துள்ளது.

சமூக ஊடக சேனல்கள் வழியாக தொடங்கப்படும் இந்த புகைப்பட போட்டியானது, எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியை ஊக்குவிப்பதையும், பொதுப் பயன்பாட்டிற்கு பொதுமக்களை முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் RTA கூறியுள்ளது. மேலும் இந்த போட்டி கேனான் மத்திய கிழக்கு மற்றும் கியோலிஸ்-மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரூட் 2020 ஐப் பயன்படுத்தி எக்ஸ்போ தளத்திற்கு பயணத்தின் போது எடுக்கப்படும் வீடியோ கிளிப் அல்லது புகைப்படங்களை #EnRouteExpo2020 என்ற ஹேஷ்டேக்குகள் மூலம் பகிர வேண்டும் என்றும், மேலும் பங்கேற்பாளர்கள் @canonme மற்றும் @rta_dubai சமூக ஊடக கணக்குகள் வழியாகவும் அவர்களின் புகைப்படம் அல்லது வீடியோ கிளிப்பை ஒளிபரப்பலாம் எனவும் RTA வின் கார்ப்பரேட் நிர்வாக ஆதரவு சேவைகள் பிரிவு மார்க்கெட்டிங் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் இயக்குனர் ரவுடா அல் மெஹ்ரிஸி கூறியுள்ளார்.

மேலும் இப்போட்டியின் முக்கிய நிபந்தனைகளில் பயணிகளின் தனியுரிமையை மதிக்கவும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், செல்ஃபி ஸ்டிக் அல்லது புகைப்பட ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்தாமல் புகைப்படம் ஒரு போர்ட்டபிள் கேமராவால் படம் பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!