அமீரக செய்திகள்

துபாய்: மீண்டும் செயல்பட துவங்கியுள்ள குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்கள்.. விபரங்களை வெளியிட்ட RTA..!!

அமீரகம் முழுவதும் செவ்வாய்கிழமை பலத்த மழை பெய்ததால், போக்குவரத்தானது கடும் பாதிப்புக்குள்ளாகியது. துபாயை பொறுத்தவரை இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் உட்பட துபாய் மெட்ரோ சேவைகள், டிராம் சேவைகள், போக்குவரத்து மாற்றம் என பல பாதிப்புகளை எதிர்கொண்டது. அதில் தற்பொழுது டிராம் சேவைகள் முழுவதுமாக மீண்டும் இநங்க தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது மெட்ரோ சேவையிலும் குறிப்பிட்ட நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலையற்ற வானிலை காரணமாக, மெட்ரோ இயக்கத்தில் இடையூறுகள் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட  200 பயணிகள் மெட்ரோ நிலையங்களில் சிக்கித் தவித்தனர். ஆகவே, இன்று மெட்ரோவில் பயணம் செய்ய திட்டமிட்டுபவர்கள் தங்கள் பயணத்தை கவனமாக திட்டமிடுமாறு எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவுறுத்தியிருந்தது.

மேலும், இன்று புதன்கிழமை (ஏப்ரல் 17) மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைனில் உள்ள நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும் ஆணையம் இன்று காலை அறிவித்திருந்தது.

மேலும் இந்த பராமரிப்பு பணியால் ரயில் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் மெட்ரோ ரயில் நேரங்கள் பாதிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட நிலையங்களில் பயணிகள் தங்களுடைய இலக்கை அடைய இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் RTA தெரிவித்திருந்தது.

இந்நிலையில் துபாய் மெட்ரோவின் ஒரு சில நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீங்கள் துபாய் மெட்ரோவில் பயணம் செய்கிறீர்கள் என்றால், ரெட் லைன் மற்றும் கிரீன் லைனில் செயல்படும் நிலையங்களின் விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

செயல்படும் ரெட் லைன் நிலையங்கள்:

  • சென்டர்பாயிண்ட் ஸ்டேஷன் முதல்  GGICO ஸ்டேஷன் வரை
  • புர்ஜுமான் நிலையம் முதல் பிசினஸ் பே நிலையம் வரை
  • ஜபெல் அலி முதல் எக்ஸ்போ 2020 நிலையம் வரை

இன்று மாலை 4.41 மணிக்கு, எமிரேட்ஸ் டவர்ஸ், புர்ஜ் கலீஃபா/துபாய் மால், ஃபைனான்ஷியல் சென்டர் மற்றும் பிசினஸ் பே ஆகிய நான்கு நிலையங்களில் சேவைகள் திரும்பியதாகவும், மீதமுள்ள நிலையங்களையும் படிப்படியாக திறக்கும் பணி நடந்து வருவதாகவும் RTA அறிவித்துள்ளது.

அத்துடன் இடையில் பாதிக்கப்பட்ட நிலையங்களுக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு இலவச ஷட்டில் பஸ் சேவைகள் வழங்கப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

கிரீன் லைனில் செயல்படும் நிலையங்கள்:

  • எடிசலாட் நிலையம் முதல் அபு ஹைல் வரை
  • க்ரீக் நிலையம் முதல் அல் ராஸ் வரை

இவை தவிர, இடையில் பாதிக்கப்பட்ட நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகளுக்கு ஷட்டில் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

துபாய் மெட்ரோவின் வரைபடம்:

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!