அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய சாலையில் 1.6 கிமீ நீளமுள்ள 6 வழி சுரங்கப்பாதைக்கு ஒப்புதல்.. போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை..!!

துபாயின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல்வேறு புதிய சாலை மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தற்போது ஆணையம் இரு திசைகளிலும் மணிக்கு 12,000 வாகனங்கள் செல்லக்கூடிய 1.6 கிமீ நீளம் கொண்ட ஆறு வழிச் சுரங்கப்பாதையை உருவாக்கும் அல் கலீஜ் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதை திட்டத்திற்கான (Al Khaleej Street Tunnel Project) ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

இந்த சுரங்கப்பாதை அபு ஹைல், அல் வுஹெய்தா, அல் மம்சார், துபாய் ஐலேண்டஸ், துபாய் வாட்டர்ஃபிரண்ட், வாட்டர்ஃபிரண்ட் மார்க்கெட் மற்றும் அல் ஹம்ரியா துறைமுகத்திற்கான இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

துபாயின் பட்டத்து இளவரசர் மற்றும் துபாய் நிர்வாகக் குழுவின் தலைவரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம், தேராவில் உள்ள இன்ஃபினிட்டி ப்ரிட்ஜின் வளைவின் முடிவில் இருந்து அல் கலீஜ் மற்றும் கெய்ரோ ஸ்ட்ரீட்களின் சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.

இது குறித்து RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர், இயக்குனர் ஜெனெரல் மட்டர் அல் டேயர் கூறுகையில், அல் கலீஜ் தெரு சுரங்கப்பாதை அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இது RTA ஆல் தற்போது மேற்கொள்ளப்படும் விரிவான திட்டங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி, அல் கலீஜ் ஸ்ட்ரீட் திட்டம் நான்காம் கட்ட அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அல் கலீஜ் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதையின் நோக்கம்:

  • இன்ஃபினிட்டி ப்ரிட்ஜில் இருந்து தேராவை நோக்கியும், பின்னோக்கியும் சீரான போக்குவரத்து ஓட்டம்.
  • கெய்ரோ மற்றும் அல் வுஹெய்தா ஸ்ட்ரீட்களை கடப்பதை ரவுண்டானாவிலிருந்து சிக்னல் அமைக்கப்பட்ட இண்டர்செக்சனுக்கு மாற்றுதல்
  • கெய்ரோ தெருவை மேம்படுத்தி, துபாய் ஐலண்ட்ஸில் இருந்து வடக்கு நோக்கி அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய சுரங்கப்பாதையுடன் பாலத்தின் பகுதியை இணைத்தல்.

அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டம்

அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டமானது சுமார் 13 கிமீ பரப்பளவில் 15 ஜங்க்‌ஷன்களின் கட்டுமானத்தை உள்ளடக்கியது. அதன் பாரிய நோக்கம் காரணமாக, திட்டமானது ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு சேவை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2030 ஆம் ஆண்டளவில் பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து வெறும் 16 நிமிடங்களாகக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

RTA தற்போது ஷேக் ரஷீத் தெருவில் 4.8 கிலோமீட்டர் மேம்பாட்டுத் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறது, இது ஷேக் கலீஃபா பின் சையத் தெருவின் இன்டர்செக்சன் முதல் அல் மினா தெருவில் உள்ள ஃபால்கன் இன்டர்செக்சன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது, மொத்தம் 3.1 கி.மீ நீளமுள்ள மூன்று பாலங்களை நிர்மாணிப்பதாகும். மூன்று பாலங்களில் உள்ள அனைத்து பாதைகளும் ஒரு மணி நேரத்திற்கு 19,400 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளைக் கொண்ட முதல் பாலம் 1,335 மீட்டர் நீளம் உடையது. இது ஷேக் ரஷித் சாலை மற்றும் பால்கன் இன்டர்சேஞ்ச் இடையே போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குவதுடன் இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,800 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

இரண்டாவது பாலம் 780 மீட்டர் நீளம் கொண்டது, இது பால்கன் இன்டர்சேஞ்சிலிருந்து அல் வாஸ்ல் சாலைக்கு செல்லும் மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது. மூன்றாவது பாலம் 985 மீட்டர் நீளம் கொண்டது, இது ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், ஜுமைரா ரோட்டில் இருந்து அல் மினா ஸ்ட்ரீட் மற்றும் ஃபால்கன் இன்டர்சேஞ்ச் நோக்கி செல்லும் போக்குவரத்திற்கு இரண்டு பாதைகள் உள்ளன.

கூடுதலாக, இந்தத் திட்டத்தில் தெரு விளக்குகள், போக்குவரத்து அமைப்புகள், மழைநீர் வடிகால் நெட்வொர்க் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் போன்ற பிற வேலைகளுடன் கூடுதலாக ஷேக் ரஷீத் சாலையில் ஒன்று மற்றும் அல் மினா தெருவில் இரண்டு பாதசாரி பாலங்களை நிர்மாணிக்கும் பணிகள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!