வளைகுடா செய்திகள்

சவுதியின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இ-கேட்கள் அறிமுகம்..!! பயண நடைமுறைகளை மேம்படுத்த புது முயற்சி..!!

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள பெரிய விமான நிலையமான கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் (King Khalid International Airport) முதல் கட்ட இ-கேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாஸ்போர்ட் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் இந்த சேவையானது, சவூதி அரேபிய பாஸ்போர்ட் பொது இயக்குநரகத்தால் (Saudi General Directorate of Passports) ஏப்ரல் 2, செவ்வாய்க்கிழமையன்று தொடங்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் அமைப்பில் சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் விரைவான மற்றும் நேரத்தைச் சேமிக்கும் வகையில், விமான நிலைய ஊழியர்களின் தலையீடு இல்லாமல் பயணிகள் தாங்களாகவே நடைமுறைகளை முடிப்பதே இ-கேட்ஸ் சேவையின் நோக்கம் என்று தொடக்க விழாவில் கலந்துகொண்ட பாஸ்போர்ட் பொது இயக்குநரகத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சுலைமான் அல் யஹ்யா (Sulaiman Al Yahya) கூறியுள்ளார்.

முக்கியமாக, இந்த இ-கேட்கள் குடிமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் பயண நடைமுறைகளை மேம்படுத்தவும், ஸ்மார்ட் மற்றும் நவீன டிஜிட்டல் சேவைகளை வழங்குவதன் மூலம் பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை ஒருங்கிணைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.

மேலும், பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (General Authority of Civil Aviation- GACA) தலைவர் அப்துல் அசிஸ் அல் துவைலேஜ் (Abdulaziz Al Duailej) பேசுகையில், விமான நிலையத்தின் சர்வதேச புறப்பாடு முனையம் 3 மற்றும் 4 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சேவையானது, தேசிய விமானப் போக்குவரத்து மூலோபாயத்தின் நோக்கங்களை நிறைவேற்ற சவூதி விமானத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியா 2030ஆம் ஆண்டுக்குள் அதன் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 330 மில்லியனாக உயர்த்தவும், தற்போதைய விமானப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தும் வகையிலும் தேசிய விமானப் போக்குவரத்தை மேம்படுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த நோக்கத்திற்காகவே, புதிய விமான நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்துதல், அவற்றின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் சவுதி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இது தவிர, சுற்றுலாத் துறையை வளர்க்கவும் மேலும் விடுமுறைக்கு வருபவர்களை ஈர்க்கவும், “passenger without a bag” என்கிற சேவையை, சவுதி விமான நிலையங்களை நிர்வகிக்கும் மாதரத் ஹோல்டிங் நிறுவனம் கடந்த ஜனவரியில் அனைத்து விமான நிலையங்களிலும்  தொடங்கியது. அதாவது, பயணிகள் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்தே அனைத்து பயண நடைமுறைகளையும் முடித்து எளிதான பயண அனுபவத்தை வழங்க இந்த சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!