அமீரக செய்திகள்

அமீரகத்தில் கனமழை எதிரொலி.. விமான பயணத்தில் பாதிப்பு ஏற்படலாம்.. பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் விடுத்த அறிவுரை..!!

அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் வானிலை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், துபாய் இன்டர்நேஷனல் (DXB) விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானங்களின் பயணத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று அமீரக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட வானிலை அறிக்கையில், நேற்று திங்கள்கிழமை (ஏப்ரல் 15)  பிற்பகுதியில் சீரற்ற வானிலை தொடங்கும் என்றும், இது நாளை ஏப்ரல் 17, புதன்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

அதன்படி, தலைநகர் அபுதாபி உட்பட துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவின் சில பகுதிகளில் நேற்று பிற்பகல் முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த வானிலை நேற்று இரவில் தீவிரமடையும் எனவும் தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் விமான நிறுவனங்கள், தங்களின் பயணிகளுக்கு பயணம் குறித்த சில அறிவுரைகளை வழங்கியுள்ளன. அந்தவகையில், ஃபிளைதுபாய் (Flydubai) நிறுவனம், விமானம் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பயணிகளின் பயண அட்டவணையில் ஏதேனும் இடையூறு ஏற்படுவதைக் குறைக்க நாங்கள் செயல்படுவதாகவும், மேலும் விமான பயணத்தின் நிலையை தெரிந்துகொள்ள தங்களின் வலைத்தளத்தை சரிபார்க்கவும் பயணிகளை ஃபிளைதுபாய் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தங்களின் அனைத்து விமானங்களும் திங்கள்கிழமை மாலை வரை, பயண நேரத்தில் எவ்வித மாற்றமுமின்றி விமானங்கள் திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி செயல்படும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.

இறுப்பினும், தற்போதைய சூழலில் வானிலை நிலவரத்தை பொறுத்து பயண தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், விமான பயணிகள் தங்களின் பயண நேரத்திற்கு முன்பாக குறிப்பிட்ட விமானத்தின் நிலையை அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபாரத்துக்கொள்ளுமாறு எமிரேட்ஸ் நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்று, துபாயில் கடந்த மாதம் ஏற்பட்ட கனமழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக மார்ச் 9ம் தேதி அன்று நிலவிய மோசமான வானிலை காரணமாக, துபாய் வரக்கூடிய சுமார் 13 விமானங்கள் அபுதாபி, மஸ்கட் என அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!