அமீரக செய்திகள்

UAE: காலாவதியான விசா வைத்திருப்பவர்களுக்கு செல்லுபடி காலம் தானாகவே நீட்டிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஏப்ரல் மாதம் விதித்த பயணத்தடையால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து பயணிகள் அமீரகம் பயணிக்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட செல்லுபடியாகும் குடியிருப்பாளர்கள் உட்பட குறிப்பிட்ட பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டு அமீரகம் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் மூலம் பல குடியிருப்பாளர்கள் பயனடைந்தாலும் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் அமீரக விசா வைத்திருந்த நபர்கள் பலருக்கு விசாவானது காலாவதியாகிவிட்டது. மேலும் இத்தடையினால் சில குடியிருப்பாளர்களுக்கு அமீரகத்திற்கு வெளியே 6 மாதத்திற்கும் மேல் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், சில காலாவதியான துபாய் விசாக்கள் வைத்திருப்பவர்களின் விசா செல்லுபடி காலம் டிசம்பர் 9, 2021 வரை தானாகவே நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர் சென்டர் அளித்துள்ள தகவலின் படி, இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து அமீரகம் வரும் பயணிகளுக்கு பயணத்தடை செய்யப்பட்ட காரணத்தினால் காலாவதியான விசா வைத்துள்ள பல குடியிருப்பாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தானாகவே விசா புதுப்பித்தல் வழங்கப்பட்டுள்ளது.

காலாவதியான விசாக்கள் வைத்திருக்கும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களும் பயண முகவர்களும் இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பயணத்திற்கு முந்தைய GDRFA ஒப்புதல் கட்டாயம்

துபாயில் உள்ள அமர் சென்டர் ஊழியர் “காலாவதியான விசாக்களுடன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்களுக்கு டிசம்பர் 9 வரை ஒரு மாத சலுகை காலம் உட்பட காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களில் தானியங்கி புதுப்பித்தல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்வதற்கு முன், அவர்கள் பயணத்திற்கு முந்தைய GDRFA ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மற்ற அனைத்து RT-PCR சோதனை நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்” என்று விளக்கியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பயணத்திற்கு முன் அனுமதி பெற முயன்ற பயண முகவர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தானாகவே விசா நீட்டிப்பு வழங்கப்பட்டதை தெரிவித்துள்ளனர்.

தானியங்கி நீட்டிப்பு துபாய் ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று முகவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஆறு மாதங்களுக்கு மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களும் திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மற்ற அமீரகங்களில் வசிப்பவர்களின் நிலை குறித்து இன்னும் சரிவரத் தெரியவில்லை.

ஸ்மார்ட் டிராவல்ஸின் நிர்வாக இயக்குனர் அஃபி அகமது  கூறுகையில், “காலாவதியான விசாக்கள் குறித்து, நாங்கள் கவனிப்பது என்னவென்றால், எங்கள் வாடிக்கையாளர்கள், ஜூன், ஜூலை மாதத்திற்குப் பிறகு காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த தானியங்கி மூன்று மாத கால நீட்டிப்பைப் பெறுகிறார்கள்“ என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே 180 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தவர்கள் மற்றும் அடையாள மற்றும் குடியுரிமை (ICA) அல்லது GDRFA ஒப்புதல்களைப் பெற்றவர்கள் அமீரகம் திரும்பலாம். விமான நிறுவனங்கள் இந்த வகை பயணிகளை அமீரகம் பயணிக்க அனுமதிக்கின்றன. இருப்பினும், இந்த விலக்குகள் துபாய் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் கவனிக்க வேண்டியது அவசியம்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரூஹா டிராவல்ஸின் நிர்வாக இயக்குனர் ரஷித் அப்பாஸ் கூறுகையில், “புதன்கிழமை அதிகாலையில் இந்த அமைப்பு புதுப்பிக்கப்பட்டதை நாங்கள் கவனித்தோம். விசா செல்லுபடியைத் தெரிந்து கொள்ளும் வலைத்தளத்தைப் பார்த்தபோது, காலாவதியான விசா வைத்திருந்த ​​பலருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். இருப்பினும், சில விசாக்கள் காலாவதியான நிலையை தொடர்ந்து காட்டுகின்றன. இவர்களுக்கும் விரைவில் விலக்கு வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

மற்றொரு பயண முகவர் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 9 வரை தானியங்கி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். அத்துடன், துபாயால் வழங்கப்பட்ட நுழைவு அனுமதிகளை (entry permit) வைத்திருப்பவர்கள் பற்றிய தெளிவு கிடைக்க வேண்டியும் காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல விரும்புவோர் https://amer.gdrfad.gov.ae/visa-inquiry என்ற இணையதளத்தில் தங்கள் விசா நிலையை சரிபார்க்கலாம்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!