அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று நிலவும் மூடுபனி..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி நிலவுவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அமீரகத்தின் கடலோர மற்றும் உள் பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

அல் அய்ன் – துபாய் செல்லும் திசையில் உள்ள முக்கிய சாலைகளில் வேக வரம்புகள் மூடுபனி காரணமாக மாறியிருப்பதால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் மாற்றப்பட்ட வேக வரம்பைக் காட்டும் மின்னணு அடையாள பலகைகளை வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. அல் அய்ன் – துபாய் சாலை (அல் ஹியார் – அல் ஃபக்கா), அல் பதா – நஹில் சாலை மற்றும் ஸ்வீஹான் சாலையில் (நஹில் – அல் ஹியார்) வேக வரம்பு மணிக்கு 80 கிமீ வேகத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைகளில் பிற்பகலில் வெப்பச்சலன மேகங்கள் தோன்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அபுதாபி மற்றும் துபாயில் முறையே அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் மற்றும் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

அமீரகத்தில் இதற்கு முன்னர் இருந்ததை விட கடந்த ஒரு சில நாட்களாக சிறிது வெப்பம் தணிந்தே இருக்கிறது. மேலும் பெரும்பாலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனியும் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலையுதிர் காலம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!