அமீரக செய்திகள்

அமீரகவாசிகளே.. ஆகஸ்ட் 28ம் தேதி பத்திரமாக கார் ஓட்டினால் 4 பிளாக் பாயிண்டை நீக்கலாம்..!! எப்படினு தெரியுமா.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரக்கூடிய ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று, ‘Day without accidents’ என்ற பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்த முன்முயற்சியில் பங்கேற்கும் வாகன ஓட்டிகள் அந்த ஒரு நாளில் போக்குவரத்து விதிமீறல்கள் அல்லது விபத்துகளைப் பதிவு செய்யாமல், விபத்துகள் இல்லாத நாளில் பங்கேற்பதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும்.

அதன்படி, எந்தவொரு போக்குவரத்து மீறல்கள் மற்றும் விபத்துகளையும் பதிவு செய்யாமல் இருக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் போக்குவரத்து கோப்புகளில் இருந்து நான்கு பிளாக் பாயின்ட்களை அகற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஃபெடரல் டிராஃபிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

பொதுவாக ஒரு வாகன ஓட்டி போக்குவரத்து விதிமீறல் புரிந்ததன் அடிப்படையில் நான்கு முதல் அதிகபட்சம் 24 பிளாக் பாயின்ட்கள் வரை பெறலாம். ஓட்டுநருக்கு 24 பிளாக் பாயின்ட்கள் இருந்தால், அந்த வழக்கு அமீரக நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டு லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரத்தில் எவ்வாறு பங்கேற்பது?

அமீரக பெடரல் போக்குவரத்துக் கவுன்சிலின் இந்த சாலை பாதுகாப்பு முயற்சியில் நீங்களும் பங்காற்ற விரும்பினால், ஆன்லைனில் உங்கள் ஆதரவையும் பங்கேற்பையும் உறுதியளிக்கலாம்:

இந்த இரண்டு இணையதளங்களில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து, உங்களின் எமிரேட்ஸ் ஐடி , UAE PASS அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி பதிவுசெய்யலாம். குறிப்பாக, பதிவுசெய்ய உங்களின் எமிரேட்ஸ் ஐடி அல்லது UAE PASS-ஐ பயன்படுத்தினால் மட்டுமே, இந்த முயற்சியில் பங்கேற்பதற்கான உங்கள் உறுதிமொழியை அங்கீகரிக்கும் சான்றிதழைப் பெறுவீர்கள்.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள இந்த பிரச்சாரம், மாணவர்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் புதிய கல்வியாண்டில் பள்ளிக்குத் திரும்பும் நாளான ஆகஸ்ட் 28ம் தேதி அன்று நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து இல்லாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆறு வழிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.

1. பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்

உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை டெயில்கேட் செய்வது விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. அமீரக ஃபெடரல் டிராஃபிக் சட்டத்தின்படி, டெயில் கேட்டிங் செய்தால், உங்கள் டிரைவிங் லைசென்ஸில் நான்கு பிளாக் பாயின்ட்கள் விதிக்கப்படுவதுடன் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம். அபுதாபியில், உங்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்படும், மேலும் அதை விடுவிக்க 5,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.

2. பாதசாரிகளுக்கு வழி விடவும்

அமீரக போக்குவரத்து சட்டத்தின் படி, சாலைகளில் பாதசாரிகள் கடப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள வரியிடப்பட்ட பகுதிகளில் பாதசாரிகளுக்கு வழிவிடவில்லை என்றால் வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயின்ட்கள் விதிக்கப்படும்.

3. சீட் பெல்ட் அணிதல்:

  • ஒரு வாகனத்தில் நீங்கள் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தாலும், சட்டப்படி, சீட் பெல்ட் அணிய வேண்டும். இல்லையெனில், ஓட்டுநருக்கு 400 திர்ஹம்கள் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயின்ட்கள் விதிக்கப்படும்.
  • குறிப்பாக, நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு குழந்தை பாதுகாப்பு இருக்கை வழங்கப்பட வேண்டும். மீறுபவர்களுக்கு 400 திர்ஹம் அபராதமும் நான்கு பிளாக் பாயின்ட்களும் விதிக்கப்படும்.
  • முன் இருக்கையில் இருக்கும் பயணியும் குறைந்தபட்சம் 145 செமீ உயரம் இருக்க வேண்டும் மற்றும் 10 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது.

4. வேக வரம்பை பின்பற்றவும்

சாலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்பிற்குள் வாகனம் ஓட்டுவது, ‘விபத்து இல்லா நாள்’ பிரச்சாரத்தின் மற்றொரு முக்கிய பகுதியாகும். அமீரகத்தில் ஒவ்வொரு சாலையிலும் கவனிக்க வேண்டிய அதிகபட்ச வேக வரம்பை தெளிவாகக் குறிப்பிடும் வழிகாட்டி பலகைகள் உள்ளன.

அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டினால் 300 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, அபராதங்கள், பிளாக் பாயின்ட்கள் அல்லது வாகனம் பறிமுதல் செய்யப்படுவது போன்ற சட்ட நடவடிக்கை விதிமீறலின் தீவிரத்தைப் பொறுத்து எடுக்கப்படும்.

5. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்

2022 ஆம் ஆண்டு அபுதாபி காவல்துறை நடத்திய ஆய்வில், 80 சதவீத சாலை மரணங்கள் மற்றும் கடுமையான காயங்கள் வாகன ஓட்டிகள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டியதால் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் கவனத்துடன் ஓட்டுவது அவசியமாகும். சாலைகளில் கவனத்தைச் சிதறடித்து ஓட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6. அவசரநிலை, காவல்துறை மற்றும் பொது சேவை வாகனங்கள் அல்லது உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு வழி விடவும்

சாலைகளில் செல்லும்போது, அவசரகால வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் வாகனத்தை 30 நாட்களுக்கு ஜப்தி செய்வது மற்றும் வாகன உரிமையாளரின் உரிமத்தில் ஆறு டிராபிக் பாயின்ட்கள் விதிக்கப்படும்.

பள்ளி இருக்கும் பகுதிகளில் வாகனம் ஓட்டுதல்:

  • போக்குவரத்து சிக்னலில் உள்ளவற்றை கடைபிடித்தல்
  • போக்குவரத்து காவலர்களின் அறிவுரைகளை பின்பற்றுதல்
  • பொறுமையைக் கடைபிடித்தல்
  • நியமிக்கப்பட்ட பாதைகளில் தங்குதல்
  • மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனம் நிறுத்தும் இடங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத இடங்களில் வாகனம் நிறுத்துவதைத் தவிர்த்தல்

கோடை விடுமுறைக்குப் பிறகு, மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவதால், அமீரகத்தின் சாலைகளில் அதிக கார்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பள்ளி மண்டலங்களைச் சுற்றியுள்ள சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!