கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிப்பு..!!! அதிகபட்சமாக 50,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!!
ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா எனும் கொடிய வைரஸைக் கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களையும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமீரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாமல் விதிகளை மீறும் நபர்களுக்கு, அவர்களின் விதிமீறல்களை பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை (Social Distance) பராமரிக்காத மக்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் தேவையற்ற காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறியதற்காக 2,000 திர்ஹம் அபராதம் ஆகியவை கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்கான புதிய அபராதங்களாகும்.
ஐக்கிய அரபு அமீரக சட்ட அதிபர், ஆலோசகர் ஹமாத் சைஃப் அல் ஷம்சி, மார்ச் 27, வெள்ளிக்கிழமை அன்று, தொற்றுநோய்களைப் பரப்புவதற்கான விதிமுறைகளை மீறுவது தொடர்பாக 2020 ஆம் ஆண்டிற்கான தீர்மான எண் (38)ஐ 2020 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து அதற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக 500 திர்ஹம் முதல் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தீர்மானத்தின்படி, முக்கியமற்ற வேலைக்காக பொருட்களை வாங்குவதற்கென “Stay Home” விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியேறும் நபர்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுகிறது.
மருத்துவ முககவசங்களை அணியாததற்காக அல்லது தெருக்களில் நடக்கும்போது சமூக இடைவெளியை (social distance) பராமரிக்கத் தவறியதற்காக 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், மூன்று பேருக்கு மேல் காரில் அனுமதிக்கும் வாகன ஓட்டிக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
மார்ச் 26 ம் தேதி வெளியிடப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்த இந்த அமைச்சரவை முடிவு, கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி, ஒரு நபர் விதிமீறலை மீண்டும் செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் எனவும் மூன்றாவது முறையாக மீறலைச் செய்தால், குற்றவாளி கூட்டாட்சி பொது வழக்குக்கு பரிந்துரைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீறல்கள் மற்றும் அபராதங்களின் பட்டியல்
- வீட்டு தனிமைப்படுத்தலின் அறிவுறுத்தல்களுக்கு இணங்காத நபர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம்.
- மருத்துவமனையில் கண்டிப்பாக அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகள், அதற்கு மறுப்பு தெரிவித்தால் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுக்கத் தவறும் நோயாளிகளுக்கு 50,000 திர்ஹம் அபராதம்.
- ஷாப்பிங் சென்டர்கள், மால்கள், வெளிப்புற சந்தைகள், ஜிம்கள், பொது நீச்சல் குளங்கள், சினிமாக்கள், கிளப்புகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்களை சாப்பிடும் வாடிக்கையாளர்கள் போன்ற மூட உத்தரவிடப்பட்ட பொது இடங்களை, விதிகளை மீறி செயல்படுத்தினால் 50,000 திர்ஹம் அபராதம். மேற்குறிப்பிட்ட பொது இடங்களைப் பார்வையிட்டவர்களுக்கு 500 திர்ஹம் அபராதம்.
- சமூக கூட்டங்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ததற்கு 10,000 திர்ஹம் அபராதம்.
- சமூக கூட்டங்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம்.
- கோரிக்கையின் பேரில் மருத்துவ பரிசோதனை நடத்தாததற்கு 5,000 திர்ஹம் அபராதம்.
- தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஐக்கிய அரபு அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வகுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் மீறினால் 2,000 திர்ஹம் அபராதம்.
- சாலைகள், சந்தைகள் மற்றும் தற்காலிகமாக மூடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிற பொது இடங்களில் சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் 3,000 திர்ஹம் அபராதம்.
- மருத்துவ முககவசங்களை அணியாததற்கு 1,000 திர்ஹம் அபராதம்.
- மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார இடங்களுக்கு தேவையற்ற வருகைக்கு 1,000 திர்ஹம் அபராதம்.
- 3-க்கும் மேற்பட்ட நபர்களை காரில் அனுமதித்ததற்காக வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம்.
- நடைபயிற்சியின் போது சமூக இடைவெளியை (social distance) பராமரிக்காததற்காக 1,000 திர்ஹம் அபராதம்.
- எந்தவொரு முக்கியமான வேலையோ அல்லது உண்மையான காரணமோ இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதற்கு 2,000 திர்ஹம் அபராதம்.
- ஒரு தொற்று நோயால் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யும்போது அல்லது கொண்டு செல்லும்போது சட்டத்தின் விதிகளை மீறினால் 3,000 திர்ஹம் அபராதம்.
- சுகாதாரத்தை பராமரிக்கத் தவறும் மற்றும் பொது போக்குவரத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத ஓட்டுநர்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம்.
- கப்பல்களில் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக 10,000 திர்ஹம் அபராதம்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் அமீரக அரசின் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையாகும்.