அமீரக செய்திகள்

உலகின் மிகப்பெரிய சோலார் பார்க்கின் மூன்றாம் பகுதியை திறந்து வைத்த துபாய் ஆட்சியாளர்..!!

தூய்மையான ஆற்றலை உருவாக்குவதில் துபாயின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமீபத்தில் அமீரகத்தில் வடிவம் பெற்று வரும் பிரமாண்டமான சோலார் பார்க்கினை (Solar Park) பார்வையிட்டு, துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA) கண்டுபிடிப்பு மையத்தையும் (innovation center), உலகின் மிகப்பெரிய 800 மெகாவாட் கொண்ட முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சோலார் பார்க்கின் மூன்றாம் பகுதியையும் திறந்து வைத்துள்ளார். 2030 க்குள் திட்டமிடப்பட்ட 5,000 மெகாவாட் மொத்த திறன் கொண்ட இந்த சோலார் பார்க்கிற்கு 50 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி (Concentrated Solar Power) திட்டமான சோலார் பார்க்கின் 950 மெகாவாட் நான்காவது கட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். இது Independent Power Producer (IPP) மாதிரியைப் பயன்படுத்தி 15.78 பில்லியன் திர்ஹமில் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சோலார் பார்க்கின் நான்காவது பகுதியும், உலகின் மிகப்பெரிய ஒற்றை தள முதலீடாகும் (largest single-site investment).

இந்த திட்டம் உலகின் மிக உயரமான சூரிய சக்தி டவரைக் (solar power tower) கொண்டுள்ளது, இது 262.44 மீட்டர் உயரத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், “ஷேக் முகமது முகமது பின் ரஷீத் சோலார் பார்க்கினை நான்காவது கட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தேன். இது 15 பில்லியன் திர்ஹம் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தின் மொத்த செலவு 50 பில்லியன் திர்ஹமாக இருக்கின்றது. இதுவே செறிவூட்டப்பட்ட சூரியசக்தி திட்டத்தில் உலகின் மிகப்பெரிய முதலீடாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், “அடுத்த 30 ஆண்டுகளுக்குள் துபாய்க்கு 75% தூய்மையான ஆற்றலை எட்டுவதே எங்கள் குறிக்கோள், நாங்கள் சொல்வதைத்தான் செய்கிறோம், நாங்கள் செய்வதைத்தான் சொல்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

5,000 மெகாவாட் மொத்த திறன் கொண்ட இந்த சோலார் பார்க் துபாயில் 270,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!