கொரோனா வைரஸ் : ஈரானில் ஒரே நாளில் 113 பேர் உயிரிழப்பு..!!! பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்…!!!
மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய எண்ணிக்கை 15,000 ஐ எட்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஈரானில் கொரோனா வைரஸால் பாதிப்படைப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். நேற்று ஒரு நாள் மட்டும் ஈரானில் கொரோனா வைரஸால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,209 பேர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஏறக்குறைய 14,000 பேர் ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக 1,209 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளிற்கு 113 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சரின் ஆலோசகரான அலிரேஸா வஹாப்சாதே ட்வீட் செய்துள்ளார்.
மக்கள் அனைத்து பயணங்களையும் ரத்துசெய்து வீட்டிலேயே இருக்க வேண்டும், இதனால் வரும் நாட்களில் நிலைமை மேம்படுவதைக் காணலாம் என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் தொலைக்காட்சி செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில், 4,590 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஈரானில் அதிகபட்சமாக தெஹ்ரான் மாகாணத்தில் 251 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, ஈரானில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பேணுமாறு அந்நாட்டின் சுகாதார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.