அமீரகத்தில் வசிப்பவர்களின் கவனத்திற்கு…!!! அமீரக விசா ரத்து பற்றிய முழு விபரம்…!!!
ஐக்கிய அரபு அமீரகம் தனது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு, மார்ச் 17 க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வகையான புதிய விசாக்களையும் ரத்து செய்வதாக அமீரகத்தின் “இருப்பிட மற்றும் வெளியுறவு பொது இயக்குநரகம்” இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விசாக்களை கொண்டு யாரேனும் வருபவராயின், அவர்கள் இந்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது. இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கெனவே அனைத்து நாடுகளுக்குமான நுழைவு விசா வழங்குவதை மார்ச் 17 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மார்ச் 17 க்கு முன்னர் வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இது பற்றி துபாய் விமான நிலையங்களின் விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக விமான நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமீரகத்தின் இருப்பிட மற்றும் வெளியுறவு பொது இயக்குநரகம் மார்ச் 18 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, முன் வழங்கப்பட்ட UAE விசாக்கள் (அனைத்து வகைகளும்) ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும்” அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது மார்ச் 17, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் இதனால் விசா வைத்திருப்பவர்கள் எவரும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி இல்லாத காரணத்தினால் அவர்கள் விமானங்களில் போர்டிங் செய்வதற்கும் மறுக்கப்பட்டுள்ளதாக” விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது
அமீரகம் வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்:
முன்னதாக அமீரக அரசு வெளிநாடுகளிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இது பற்றிய தெளிவான புரிதலையும் விளக்கத்தையும் பயணிகள் அனைவருக்கும் விமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பயண ஏற்பாட்டாளர்களும் மற்றும் டிக்கெட் புக் செய்யும் நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு இது பற்றிய அறிவிப்பை டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பே அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் அதன் கூட்டு நிறுவனங்களுடன் இனைந்து இந்த புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தால் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளன.
இருப்பினும், அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்கள் விசாக்களின் நிலையை புதுப்பித்தல், நீட்டித்தல் அல்லது திருத்துதல் போன்றவற்றில் எந்த மாற்றமும் இருக்காது என்று ட்ராவல் ஏஜெண்ட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
திருப்பி அனுப்பப்பட்ட பயணிகள்:
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை முதல் அமீரகத்தில் புதிய விசாக்களுடன் தரையிறங்கிய பல பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பயணிகளில் சிலர் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் மற்றவர்கள் பல மணிநேரங்களுக்குப் பிறகு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.