அமீரக செய்திகள்

துபாய்: தேரா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 2 தமிழர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு.. 9 பேர் காயம்..!!

துபாயில் அல் ராஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) நண்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக துபாய் குடிமைத் தற்காப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் அமைந்துள்ள அபார்ட்மென்டில் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளிலும் பரவியதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில், துபாய் குடிமைத் தற்காப்புக் குழுக்கள் தீ விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக வந்து குடியிருப்பாளர்களின் வெளியேற்றம் மற்றும் தீயை அணைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததாலயே தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மதியம் 12:35 மணிக்கு தீ விபத்து குறித்து துபாய் குடிமைத் தற்காப்பு நடவடிக்கை அறைக்கு முதலில் அறிவிக்கப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து துபாய் குடிமைத் தற்காப்புத் தலைமையகத்திலிருந்து ஒரு குழு தகவல் தெரிவிக்கப்பட்ட ஆறு நிமிடங்களுக்குள் மதியம் 12:41 மணிக்கு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. பின் பிற்பகல் 2.42 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துபாயில் வசிக்கும் இந்திய சமூக சேவகர் நசீர் வடனப்பள்ளி, இறந்தவர்களை அடையாளம் காண துபாய் காவல்துறை, துபாயில் உள்ள இந்திய தூதரகம், பிற தூதரக அதிகாரிகள் மற்றும் இறந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகக் கூறியுள்ளார்.

இதுவரை, கட்டிடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், கட்டிடத்தில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, மூன்று பாகிஸ்தானிய உறவினர்கள் மற்றும் ஒரு நைஜீரியப் பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நசீர் வடனப்பள்ளி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக நடைமுறைகளுக்காக அந்த இடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான அறிக்கையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், துபாய் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த துயற சம்பவத்தையடுத்து துபாயில் உள்ள குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் கட்டிடங்களின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!