அமீரக செய்திகள்

அமீரகத்தில் இருந்து இந்தியா செல்ல பயணத்திற்கு முந்தைய PCR டெஸ்ட் தேவையா..?? புதிய வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன..??

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது இந்தியாவிற்கு பயணிக்கும் சர்வதேச பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை புதுப்பித்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 14 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14 ம் தேதிக்குப் பிறகு நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டால், இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MOHFW) வெளியிட்டிருக்கும் புதிய பயண வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் இந்தியா சென்றவுடன் 7-நாள் தனிமைப்படுத்தல் மற்றும் இந்தியா சென்ற 8 ஆம் நாளில் மறு பரிசோதனை போன்ற தேவைகளை நீக்குகிறது. மேலும் 82 நாடுகளில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைப் பதிவேற்றும் பயணிகளுக்கு சில தளர்வுகளை அரசு வழங்குகிறது.

இதனை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை அகற்றி, அதற்குப் பதிலாக முதன்மை தடுப்பூசி அட்டவணை நிறைவுச் சான்றிதழை பதிவேற்ற அனுமதிக்கப்படும் நாடுகளின் மற்றொரு பட்டியலை (82 நாடுகளின் பட்டியல்) வெளியிட்டுள்ளது.

இதில் மலேசியா, ஓமான், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், மாலத்தீவுகள், நியூசிலாந்து, நெதர்லாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 82 நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளான குவைத்தும் ஐக்கிய அரபு அமீரகமும் இல்லை.

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் இந்தியா செல்ல விரும்பினால் விமானத்தில் பயணிப்பதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனை முடிவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகின்றது. இருப்பினும் இவர்கள் இந்தியாவை சென்றடைந்ததும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்

>> இந்த வழிகாட்டுதல்களின்படி, இந்தியாவிற்கு பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பயணிகள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

>> ஏர் சுவிதா சுய அறிவிப்புப் படிவத்தை https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration என்ற லிங்கில் சென்று நிரப்பவும், அதில் கடந்த 14 நாட்கள் பயண விவரங்கள் மற்றும் உங்கள் கொரோனா தொடர்பான சுகாதார விவரங்கள் ஆகியவை அடங்கும்.  

>> உங்கள் விமானம் புறப்படும் நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனையுடன் எதிர்மறையான COVID-19 RT-PCR (ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) அறிக்கையைப் பதிவேற்ற வேண்டும் (ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).

>> பயணிகள் தங்கள் உடல்நலம் மற்றும் பயண வரலாறு குறித்து அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் தகவல்கள் துல்லியமானவை என்பதை உறுதிசெய்து கொள்ளவதோடு நிறுவன தனிமைப்படுத்தல் அல்லது சுய-சுகாதார கண்காணிப்புக்கு உட்படுவது போன்ற அதிகாரிகளின் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் உறுதியளிக்க வேண்டும்.

விமான பயணத்திற்கு முன்

>> விமான நிறுவனங்கள் கோவிட்-19 முன்னெச்சரிக்கைகள் தொடர்பான, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பயணிகளுக்கு தெரிவிக்கவும், அறிகுறியற்ற நோயாளிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

>> பயணத்தின் போது, ​​அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்படுவதையும் விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

விமான பயணத்திற்கு பின்

>> இந்தியா சென்ற பிறகு நீங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சுய-அறிக்கை படிவத்தை விமான நிலைய சுகாதார ஊழியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் விமான நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கிரீனிங் மேற்கொள்ளப்படும்.

>> அதில் கொரோனாவிற்கான அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நெறிமுறையின்படி மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் சோதனையில் நேர்மறை முடிவைப் பெற்றால், அவர்களின் தொடர்புகள் நெறிமுறையின்படி அடையாளம் காணப்பட்டு நிர்வகிக்கப்படும்.

>> மேலும், விமானத்தில் உள்ள மொத்த பயணிகளில் இரண்டு சதவீதம் பேர் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களால் அடையாளம் காணப்படுவார்கள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!