அபுதாபி : உணவகங்கள், கஃபேக்கள் மீண்டும் திறப்பதை முன்னிட்டு புதிய வழிமுறைகள் வெளியீடு..!!
அபுதாபியில் உள்ள பொருளாதார மேம்பாட்டு துறை (Department of Economic Development), அபுதாபியில் விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்துடன் (Abu Dhabi Agriculture and Food Safety Authority) ஒருங்கிணைந்து அபுதாபியில் இருக்கும் ரெஸ்டாரண்ட்கள், கஃபேக்கள் மற்றும் ஷாப்பிங்மால்களுக்கு வெளியே இருக்கும் காஃபி ஷாப் போன்றவற்றை மீண்டும் திறப்பதை முன்னிட்டு கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
உணவகங்களில் 40 சதவீத அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பதை உறுதி செய்தல், சோதனையின் மூலம் தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துதல், ஒரு மேசைக்கு அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அமர்வதை உறுதி செய்தல் மற்றும் உணவகங்களில் உள்ள மேஜைகளுக்கு இடையில் 2.5 மீட்டர் தூரத்தை பராமரித்தல் ஆகியவை அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
> 12 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட வேண்டும். நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு நுழைவதற்கு அனுமதி இருக்கக்கூடாது.
> அனைத்து ஊழியர்களும் பணியில் இருக்கும்போது எல்லா நேரங்களிலும் முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்
> ஊழியர்கள் தங்கள் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள எவருக்கும் கடைகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா தொடர்புடைய அறிகுறிகளைக் கொண்டிருக்கும் எந்தவொரு பணியாளரும் அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.
> பஃபேக்கள் (Buffet), திறந்த உணவு காட்சிகள் (Open food display), உணவு மாதிரிகள் (Food Samples) மற்றும் ஷிஷா (shisha) ஆகியவை தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளன.
> உணவகங்களில் இருக்கும் காத்திருக்கும் பகுதிகள் (waiting area) மூடப்பட வேண்டும்.
> நிறுவனங்கள் ஒற்றை பயன்பாட்டு கட்லரிகளை (cutlery) மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பநிலையில் சுத்திகரிப்பு செய்யும் தெர்மல் டிஷ்வாஷர் இருந்தால் மட்டுமே மீண்டும் பயன்படுத்தக்கூடிய கட்லரிகளைப் பயன்படுத்த வேண்டும்.
> உணவு பரிமாறுபவர் அல்லது கையாளுபவர் எவரேனும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால், நிறுவனம் மூடப்பட வேண்டும்.
> நுழைவு பகுதிகளில் சானிடைசர்கள் நிறுவப்பட வேண்டும்.
> உணவகங்கள் மற்றும் கஃபேக்களின் தரைகள் (surface) மற்றும் பயன்படுத்தும் கருவிகள் தினமும் சுத்திகரிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நாற்காலிகள் மற்றும் மேசைகள் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும்.
> தேசிய சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரங்களை பொறுத்து உணவகங்கள் மற்றும் கஃபே க்களின் வேலை நேரங்களை நியமிக்க வேண்டும்.