அமீரக விசா நீட்டிப்பு, அபராதம் குறித்து GDRFA அதிகாரி வீடியோ நேர்காணலில் தெரிவித்த தகவல்களின் தொகுப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் GDRFA அமர் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டரின் இயக்குனர் மேஜர் சலீம் பின் அலி இன்று மதியம் அமீரகத்தின் ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூஸ் (Gulf News) சேனலுக்கு வழங்கிய வீடியோ நேர்காணலில், காலாவதியான மற்றும் கேன்சல் செய்யப்பட்ட விசாக்களின் தற்போதைய நிலை மற்றும் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்புவது குறித்த விபரங்களை தெரிவித்துள்ளார். அவற்றில் சில முக்கிய தகவல்களை இங்கு காண்போம்.
மார்ச் 1 க்கு முன்னர் காலாவதியான மற்றும் கேன்சல் செய்யப்பட்ட விசாக்களின் நிலை…
அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களில் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான மற்றும் கேன்சல் செய்யப்பட்ட ரெசிடென்ஸ் விசா, விசிட் விசா, சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தங்கி இருப்பவர்கள் என அனைவருக்கும் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஓவர்ஸ்டே அபாரதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அமீரகத்தை விட்டு வெளியேற மூன்று மாதங்கள் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மூன்று மாதங்கள் கடந்த மாதம் மே 18 ஆம் தேதியிலிருந்து கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலாவதியான விசாக்களை கொண்டவர்கள் மற்றும் கேன்சல் செய்யப்பட்டவர்களில் எவருக்கேனும் அமீரகத்தில் வேலை கிடைத்து புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், ஓவர்ஸ்டே அபராதம் ஏதும் செலுத்தாமல் தங்களின் விசாக்களின் நிலையை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.
மூன்று மாத சலுகை காலம் முடிந்தும் அமீரகத்தை விட்டு வெளியேறாதவர்கள் மற்றும் தங்கள் விசாவின் நிலையை மாற்றாமல் தொடர்ந்து அமீரகத்தில் தங்கி இருப்பவர்களுக்கு ஓவர்ஸ்டே அபராதம் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 1 க்கு பின்னர் காலாவதியான மற்றும் கேன்சல் செய்யப்பட்ட விசாக்களின் நிலை…
காலாவதியான ரெசிடென்ஸ் விசா :
அமீரகத்தில் வசிக்கக்கூடிய மற்றும் விமான தடை காரணமாக அமீரகத்திற்கு வெளியே வெளிநாடுகளில் இருக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் அனைவரின் ரெசிடென்ஸ் விசாக்களும், மார்ச் 1 க்கு பின்னர் காலாவதியாகி இருந்தால், அவர்களின் விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரையிலும் அதாவது டிசம்பர் 31, 2020 வரை தானாகவே நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காலாவதியான விசிட் மற்றும் சுற்றுலா விசா :
அதே போன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் அல்லது சுற்றுலா விசாவில் வந்து தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாக அமீரகத்தில் தங்கி இருக்கக்கூடியவர்கள் அனைவரின் விசாக்களும், ரெசிடென்ஸ் விசாக்களை போலவே இந்த ஆண்டு இறுதி வரையிலும் (டிசம்பர் 31, 2020) தானாகவே நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கேன்சல் செய்யப்பட்ட ரெசிடென்ஸ் விசா :
மார்ச் 1 ஆம் தேதிக்கு பின்னர் கேன்சல் செய்யப்பட்ட விசாக்கள் தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
GDRFA அதிகாரி அந்த வீடியோ நேர்காணலில் ஒரு இடத்தில் கூறும்போது, தற்போது வரையிலும் மார்ச் 1 க்கு பின்னர் கேன்சல் செய்யப்பட்ட விசாக்களுக்கு ஓவர்ஸ்டே என்பது கணக்கில் கொள்ளப்படும் என கூறினார். எனினும் விசா கேன்சல் செய்யப்பட்டவர்கள் தங்களின் விசா நிலையை மாற்ற விரும்பினால், அபாரதத்திலிருந்து விலக்கு வேண்டி விண்ணப்பிப்பதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதே போன்று விசா கேன்சல் செய்யப்பட்டு சலுகை காலம் முடிந்த பிறகும் அமீரகத்தில் தங்கியிருப்பவர்களில், சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு ஓவர்ஸ்டே அபராதம் இல்லை என்று குறிப்பிட்டார். எனினும் பயணம் மேற்கொள்வதற்கான இறுதி தேதி குறித்த சரியான தகவல் குறிப்பிடப்படவில்லை.
கேன்சல் செய்யப்பட்ட விசாக்கள் குறித்து மேற்கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அமர் செண்ட்டரை தொடர்பு கொண்டு தங்களின் விபரங்களை தெரிவிப்பதன் மூலம், ஓவர்ஸ்டே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்களின் நிலை…
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தங்களின் சொந்த நாடுகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ சிக்கி இருப்பவர்களின் விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் விசா நீட்டிப்பு என்பது அமீரகத்திற்கு உள்ளே செல்லுபடியாகும் என்றும், பாஸ்போர்ட்டில் இருக்கக்கூடிய விசா ஸ்டிக்கரில் வேலிடிட்டி தேதி காலாவதியாகியிருப்பின் அவர்களை விமான நிறுவனமோ அல்லது அந்த நாட்டு இமிகிரேசனோ அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சூழ்நிலைகளில் அமீரகம் திரும்புவதற்கு நுழைவு அனுமதி பெற்று வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதி வரை விசா நீட்டிப்பு பெற்றவர்கள் அமீரகத்தை விட்டு வெளிநாடு செல்ல முடியுமா..
இது குறித்து விளக்கம் அளித்த மேஜர் சலீம் பின் அலி, பாஸ்போர்ட்டில் இருக்கக்கூடிய ரெசிடென்ஸ் விசா காலாவதியாகியும், இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசா நீட்டிக்கப்பட்டவர்கள், தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் எந்த சிக்கலும் இல்லை. எனினும் அமீரகம் திரும்பி வருவதில் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பாஸ்போர்ட்டில் இருக்கக்கூடிய விசா காலாவதியான நிலையில், அவர்கள் புறப்படும் நாட்டிலிருந்து அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள அவர்களை அந்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.
அவசர தேவைக்காகவோ அல்லது விடுமுறைக்காகவோ அவ்வாறு செல்ல விரும்பும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் தங்களின் விசாவினை முறையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பித்துவிட்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கல்ஃப் நியூஸ் (Gulf News) சேனலுக்கு GDRFA அதிகாரி அளித்த நேர்காணலின் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
video courtesy : Gulf News