துபாய் : சிறுவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை..!! முக கவசம் தொடர்பாக புதிய வழிமுறைகள் வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையிலான நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக்குழு, துபாயில் வசிப்பவர்கள் வீட்டிற்கு வெளியே மற்றும் பொது இடங்களில் முக கவசங்களை பயன்படுத்துவது குறித்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.
குழந்தைகள், சுவாச பிரச்சனை உடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு முக கவசங்கள் பயன்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மை குழு விளக்கமளித்துள்ளது.
நிபந்தனைகளின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிரிவுகள்..
சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் எல்லா நேரங்களிலும் தங்கள் வீடுகளுக்கு வெளியே முக கவசம் அணிய வேண்டும் என்று உச்ச குழு வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் முக கவசங்களை அணிவதில் இருந்து பின்வரும் பிரிவுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:
- ஆறு வயதிற்கு கீழுள்ள சிறுவர்கள்
- போதிய அறிவாற்றல் இல்லாத மாற்றுத்திறனாளிகள், உணர்திறன் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் முக கவசங்கள் அணிவதால் உணர்திறன் பாதிக்கப்படுபவர்கள் (மருத்துவ அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்).
- அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்கள் அல்லது கடுமையான சுவாச பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மற்றும் முக கவசத்துடன் சுவாசிக்க சிரமப்படும் நபர்கள் (மருத்துவ அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்)
தற்காலிகமாக நீக்கிக்கொள்ள அனுமதி..
பின்வரும் நிபந்தனைகளின் கீழ் மட்டுமே பொதுமக்கள் தங்கள் முக கவசங்களை தற்காலிகமாக வீட்டிற்கு வெளியே அகற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தனியாக அல்லது ஒரே வீட்டு உறுப்பினர்களுடன் வாகனங்களை ஓட்டும் போது.
- உணவகங்கள் போன்ற இடங்களில் சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது, இருப்பினும் பொதுமக்கள் மற்றவர்களுடன் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
- கடுமையான உட்புற மற்றும் வெளிப்புற உடற்பயிற்சி அல்லது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது, எனினும் சமூக இடைவெளியை எல்லா நேரங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.
- அலுவலகத்தில் வேறு நபர்கள் இன்றி தனித்து இருக்கும்போது.
- முக கவசம் அணிவதால் ஏற்படும் அபாயங்கள் அதிகமாக இருக்கும்போது, எடுத்துக்காட்டாக நீச்சல் அல்லது ஸ்கை டைவிங் செய்யும் போது.
- பல், கண், மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனைகள் போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது முக கவசங்களை அகற்ற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் போது.
இந்த விலக்குகள் சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய தேவைக்கு ஏற்பவும், முக கவசங்களை அணிவதிலிருந்து சில பிரிவுகள் எதிர்கொள்ளும் அபாயங்களை நீக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியுள்ளது. வழிகாட்டுதல்களில் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் மட்டுமே முக கவசங்களை அகற்ற வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் ஷேக் மன்சூர் அவர்களின் தலைமையிலான நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக் குழு மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.