அமீரக செய்திகள்

துபாயில் பெய்த கனமழை.. மழைநீர் புகுந்ததால் குளமாக மாறிய மெட்ரோ நிலையம்.. சேவை பாதிப்பு..!!

அமீரகத்தில் தேசிய வானிலை மையம் அறிவித்ததன் படி நேற்று முதல் மோசமான வானிலை நிலவி வருகின்றது. இன்று அதிகாலை முதலே அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதிகாரிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் மெட்ரோ பயனர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துபாய் மெட்ரோவின் ரெட் லைனில் உள்ள ஆன்பாசிவ் மெட்ரோ நிலையத்தில் கனமழை காரணமாக சேவையில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கான மாற்று ஏற்பாடாக பேருந்து சேவைகளை RTA ஏற்பாடு செய்துள்ளது.

சற்று முன்னர் ஆன்லைனில் வெளியிடப்பட்ட பல வீடியோக்கள், மெட்ரோ நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதையும் அதில் பயணிகள் சிரமப்பட்டு செல்வதையும் காணலாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கின் காரணமாக, ரயில் நிலையத்தில் மெட்ரோவில் இருந்து இறங்கியதும் நிலையத்தை விட்டு எப்படி வெளியேறுவது என்பது குறித்து சில பயணிகள் குழப்பம் அடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையற்ற வானிலையால் அமீரகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு தொலைதூர வேலை முறை, மாணவர்களுக்கு தொலைதூர கல்வி முறை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குடியிருப்பாளர்களும் அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!