குவைத் : ஊரடங்கு நேரம் மாற்றியமைப்பு..!! இரண்டாம் கட்ட தளர்வு ஜூன் 30 முதல் தொடங்கும்..!! அரசு அறிவிப்பு..!!
குவைத்தில் கொரோனாவினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஐந்து கட்டங்களாக தளர்த்தப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு தற்பொழுது முதல் கட்டம் அமலில் இருக்கின்ற வேளையில், வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 25) அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட தளர்வின் படி, வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் அந்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான நேரங்களுக்கு மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது குவைத்தில் ஊரடங்கானது இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையிலும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டாம் கட்டத்தில், பொது மற்றும் தனியார் துறைகள் 30 சதவீதத்திற்கும் குறைவான திறன் கொண்ட அளவில் தொடர்ந்து பணிபுரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஷாப்பிங் மால்கள், நிதித்துறை, கட்டுமானத் துறை, சில்லறை கடைகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி குவைத் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரெக் அல் மெஸ்ரெம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “குவைத்தில் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும், தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்” என்றும் கூறியருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், குவைத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஐந்து கட்ட திட்டத்தில் இரண்டாம் கட்ட திட்டம் ஜூன் 30 அன்று தொடங்கப்பட்டு மூன்று வார காலத்திற்கு நீடிக்கும் என்றும் செப்டம்பர் நடுப்பகுதியில் பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள பகுதிகளான ஃபர்வானியா, ஜிலீப் அல் ஷுயுக் மற்றும் மஹ்பூலா ஆகிய மூன்று இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு இயக்கமும் சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குவைத் அரசாங்கம் கடந்த மே 31 அன்று, தனது முழு ஊரடங்கு உத்தரவை முடித்து, படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப மூன்று வார பகுதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருந்தது. அதன் பின்னர், ஜூன் 18 அன்று, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எளிதாக்கி முதல் கட்டத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
— Kuwait News Agency – English Feed (@kuna_en) June 25, 2020