அமீரக செய்திகள்

வெறும் 9 மாதங்களில் 10 மில்லியன் விசிட்டர்களைக் கண்ட துபாய்..!! இந்தியர்களே முதலிடம்..!!

உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் விரும்பி செல்லக்கூடிய முக்கிய நகரமாக இருக்கும் துபாய், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றுள்ளதாக தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்து சுமார் 10 சதவிகிதம் வரவு வந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, “கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3.85 மில்லியன் பார்வையாளர்களுடன் ஒப்பிடும்போது துபாய் இந்த ஆண்டு 10.12 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இது 162.8 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் மொத்த சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை, அதாவது தொற்றுநோய்க்கு முந்தைய கால கட்டத்தில், 12.08 மில்லியனாக இருந்தது. இதனை ஒப்பிடுகையில் துபாய் சுற்றுலாத் துறையின் வலுவான மீட்சியை இது பிரதிபலிப்பதாக கருத்துகள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் துபாய்க்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்க்கு வரும் வெளிநாட்டவர்களில், இந்தியா 1.24 மில்லியனுடன் முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஓமான் (1.05 மில்லியன்), சவூதி அரேபியா (907,000), இங்கிலாந்து (720,000), ரஷ்யா (454,000), அமெரிக்கா (391,000), பாகிஸ்தான் (279,000), ஃபிரான்ஸ் (269,000), ஜெர்மனி (268,000) மற்றும் ஈரான் (247,000) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான ஓமானியர்கள் மற்றும் ரஷ்யர்கள் துபாயில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஈரானில் இருந்து வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு நெருங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குளோபல் வில்லேஜ் சீசன், எக்ஸ்போ சிட்டி துபாய், பிற முக்கிய சர்வதேச நிகழ்வுகள் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பை ஆகியவற்றின் காரணமாக சுற்றுலாவாசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வரக்கூடிய காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!