அமீரக செய்திகள்

UAE: குடிமக்களை வேலைக்கு எடுக்க தவறினால் ஜூலை முதலே அபராதம்.. விதிகளை கடுமையாக்கும் அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் அமீரக குடிமக்களை பணியமர்த்தும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அமீரக அரசு கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதன்படி அமீரக அரசின் 2 சதவீத எமிரேடிசேஷன் விகிதத்திற்கு இணங்காத தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து அமீரக அரசின் எமிரேடிசேஷன் தொடர்பான அமைச்சரவைத் தீர்மானங்களை குறித்து மனித வளங்கள் மற்றும் குடியரசியல் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் முன்னர் கூறுகையில், 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்கள் உயர் திறன்மிக்க வேலைகளில் 2 சதவீத எமிரேட்டியர்களைக் (அமீரக குடிமக்கள்) கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 சதவீத எமிரேடிசேஷன் விகிதத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த திட்டத்திற்கு இணங்காத நிறுவனங்கள் ஒவ்வொரு வேலையில்லாத அமீரக குடிமகனுக்கும் மாதம் ஒன்றுக்கு 6,000 திர்ஹம்ஸ் என்ற அடிப்படையில் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இந்த அபாரதமானது ஜனவரி 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் 1,000 திர்ஹம்ஸ் அதிகரிக்கும் என்றும், 2026 ஆம் ஆண்டுக்குள் அபராதம் மாதம் 10,000 திர்ஹம்களை எட்டும் எனவும் அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ் எமிரேடிசேஷன் இலக்குகளை அடையத் தவறிய தனியார் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை அமீரக அரசு கடுமையாக்கியுள்ளது. அதன்படி விதிகளை மீறும் நிறுவனங்களுக்கான அபராதங்கள் இப்போது ஆண்டின் இறுதிக்கு பதிலாக ஆண்டின் நடுவிலேயே விதிக்கப்படும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஜூலை 1 ஆம் தேதிக்குள் 1 சதவீத எமிரானடிசேஷன் இலக்கை அடையாத நிறுவனங்களுக்கு, பணியமர்த்தப்படாத ஒவ்வொரு அமீரக நாட்டவருக்கும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 1,000 திர்ஹம்ஸ் கூடுதலாக சேர்த்து 7,000 திர்ஹம்கள் என அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் கூறுகையில் இந்த அபராதம் புதியதல்ல என்றும் எமிரேடிசேஷன் திட்டத்தை செயல்படுத்தும் செயல்முறையே திருத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ஜூலை 1 முதல் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதோடு 2022 ம் ஆண்டில் விதிமுறைக்கு இணங்காததற்கான நிறுவனங்களின் அபராதங்கள் தொடர்ந்து வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் “தனியார் நிறுவனங்கள் இப்போது திறமையான வேலைகளில் உள்ள எமிரேட்டியர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 1 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த 2 சதவீத இலக்கை அடைய வேண்டும். இந்த திருத்தங்களில் நிறுவனங்களுக்கான கூடுதல் தேவைகள் அல்லது அபராதங்கள் எதுவும் இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) இந்த விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு கடந்த 2022 இல் 400 மில்லியன் திர்ஹம்கள் வரை அபராதம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 2021 இல் உள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2022 இல் தனியார் துறையில் பணிபுரியும் குடிமக்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!