துபாய் : WTC ல் அமைக்கப்பட்ட கள மருத்துவமனையின் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பரவல் அதிகரிக்க ஆரம்பித்ததில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமீரகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்காகவே பிரத்யேகமாக பல கள மருத்துவமனைகள் (Field Hospitals) தற்காலிகமாக திறக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு இன்றளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அமீரகத்திலேயே முதன் முதலாக கள மருத்துவமனையாக மாற்றப்பட்ட துபாயில் இருக்கும் உலக வர்த்தக மையத்தில் (World Trade Center – WTC) சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் தற்பொழுது குணமடைந்து தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ள கடைசி நோயாளி ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், தற்பொழுது இந்த உலக வர்த்தக மையமானது ஒரு பாதுகாப்பான விளையாட்டு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு 10 ம் ஆண்டு துபாய் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் ஆரம்பிக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் 3 ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த கள மருத்துவமனை, 3000 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையாகும். அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்ததை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது கள மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த கள மருத்துவமனை திறக்கப்படும் போது இதுதான் மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய மருத்துவமனை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, அபுதாபி, அஜ்மன், ராஸ் அல் கைமா போன்ற பகுதிகளிலும் கள மருத்துவமனைகள் திறக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அபுதாபியில் இருக்கும் ADNEC கள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதால் அந்த மருத்துவமனையானது கோரோனா நோயாளி இல்லாத மருத்துவமனை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், அபுதாபியில் இருக்கும் முக்கிய மருத்துவமனைகளான மெடிகிளினிக் மருத்துவமனைகள், ஷேக் ஷக்பூத் மெடிக்கல் சிட்டி, முபதலா ஹெல்த்கேர் நெட்வொர்க் போன்றவையும் கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகளாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.