பஹ்ரைன் : விசிட் விசாக்களின் செல்லுபடி காலம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு..!!
பஹ்ரைனில் இருக்கும் தேசிய, பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்ஸ் விவகாரங்கள் (Nationality, Passports and Residence Affairs, NPRA) அமைச்சகமானது அந்நாட்டில் விசிட் விசாவில் வந்து தங்கி இருக்கும் அனைத்து செல்லுபடியாகும் மற்றும் காலாவதியான விசிட் விசாக்களின் செல்லுபடி காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தினால் வளைகுடா நாடுகளானது தங்கள் நாடுகளில் வசித்து வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா தொடர்பான சலுகைகளை சமீப காலமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் விசிட் விசாவில் வந்து தங்கியிருப்பவர்களின் செல்லுபடி காலத்தை ஜூலை 21, 2020 முதல் 21 அக்டோபர் 2020 வரை என மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்நாட்டு அரசாங்கம் இதே போல் மூன்று மாதங்களுக்கு வெளிநாட்டவர்களின் விசிட் விசா செல்லுபடி காலத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இரண்டாவது முறையாக, அந்நாட்டு அரசாங்கம் விசிட் விசாவில் இருப்பவர்களின் செல்லுபடி காலத்தை நீட்டித்துள்ளது.
அனைத்து விசிட் விசாக்களின் செல்லுபடி காலமும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்றும் இதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 21 க்குப் பிறகு பஹ்ரைனில் தங்க விரும்புபவர்கள் தங்களின் விசிட் விசாக்களை புதுப்பிக்க ஈவிசா போர்ட்டல் (eVisa Portal) மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.